Saturday, September 10, 2011

முப்படையினர் சிவில் சட்டங்களை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது!

Saturday, September 10, 2011
அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் சோதனை, வீடுகளை சோதனையிடுதல், வீதித் தடைகளை ஏற்படுத்துதல், ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற அதிகாரங்களை மீண்டும் அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி முப்படையினருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறையினரைப் பயன்படுத்தாது முப்படையினர் ஈடுபட சாதாரண சட்டத்தின் கீழ் அதிகாரம் கிடைத்துள்ளது.

மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்துக்கு அமைய ஜனாதிபதிக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, முப்படையினர் சிவில் சட்டங்களை அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளதுடன் 1722-17 என்ற இலக்க வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் முப்படையினருக்கு சிவில் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிவில் கடமைகளில் முப்படையினருக்கு வழங்கப்படும் அதிகாரம் மாதமொருமுறை வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலின் கீழ் செயற்படுத்தப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கடந்த வாரம் லங்கா பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் புனர்வாழ்வு ஆணையாளர் நியமனமும் ரத்தாகும். இதனால் அண்மையில் புனர்வாழ்வு ஆணையாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சந்தன புவநேக பண்டார ராஜகுருவின் நியமனத்தை 1979 இலக்கம் 48 என்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி நீடித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் நிஹால் அப்புஆராச்சி கருத்து தெரிவிக்கும்போது, வர்த்தமானி அறிவித்தலில் கூறப்படும் விடயங்களைத் தன்னால் தெளிவுபடுத்த முடியாது எனவும், சாதாரணமாக வர்த்தமானி அறிவித்தலில் பிரதேச மக்களின் அமைதி தொடர்பாக இராணுவத்தினருக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் எனவும், சுதந்திரமாக செயற்பட்டு அமைதியை நிலைநாட்டும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட முடியும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment