Saturday, September 10, 2011சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படும் நபர்களுக்கு மரண தண்டனை வரையில் உச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற முன்மொழிவொன்றினை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்காமலிருப்பதற்கும், அதனை பிணை வழங்க முடியாத குற்றமாக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் ஏற்ற வகையில் இந்த முன்மொழிவை சமர்ப்பிக்க உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்தார்.
இதன் மூலம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பதற்கு தமது அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறினார்.
'மஹிந்த சிந்தனை' கொள்கைப் பிரகடனத்தின் 22 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை பலப்படுத்தல் மற்றும் வலுவூட்டும் நோக்கில் சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக மேற்படி சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அனோமா திசாநாயக்க கூறினார்.
கடந்த ஆண்டில் மாத்திரம் 4000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் எனவே சிறுவர்களின் எதிர்கால நலன்கருதி இந்நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முப்பது வருடகால யுத்தம் காரணமாக சிறுவர் தொடர்பாக அதிக கவனம் செலுத்த அரசாங்கத்தால் முடியாது போனதாகவும், சுதந்திரமானதும் அமைதியானதுமான சூழ்நிலை நாட்டிலே நிலவிவரும் இக்காலகட்டத்தில் சிறுவர்களின் உயர் பாதுகாப்புக்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment