Sunday, September 25, 2011இந்தியாவின் வடக்கே பனி படர்ந்த இமயமலையில் நேபாள நாடு உள்ளது. இமயமலையையும், சிகரங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து விமான சுற்றுலா நடந்து வருகிறது.
இன்று காலை காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா விமானம் புறப்பட்டுச் சென்றது. அது "புத்தா ஏர் லைன்" என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த “பீச் கிராப்ட்” குட்டி விமானம் ஆகும். அதில், இந்தியா, ஐரோப்பா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகளும் 3 விமான பணியாளர்களும் இருந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்தபடியே உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் மற்ற சிகரங்களையும் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து காட்மாண்டு நோக்கி விமானம் திரும்பிக்கொண்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு காட்மாண்டு அருகே லலித்பூர் மாவட்டம் கோட் தண்டா என்ற மலைப் பகுதியில் வந்தபோது விமானத்துக்கும் தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட் டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உஷார் நிலை பிரகடனம் செய்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மோசமான வானிலை காரணமாக விமானம் மலையில் மோதி நொறுங்கி கிடப்பது தெரிய வந்தது. உடனே காட்மாண்டுவில் இருந்து மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காட்மாண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தில் பலியானவர்களில் 8 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.
நாகராஜா என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், மேலும் 4 பேரும் பலியாகி இருக்கிறார்கள். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கு வசித்தார்கள்? என்பது தெரியவில்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த 6 பேரும் நேபாளத்தைச் சேர்ந்த 2 பேரும் விமான ஊழியர்கள் 3 பேரும் இறந்தனர்.
அதிகாலையில் மோசமான வானிலை காரணமாக விமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்தன. உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தின் பாகங்களும் சிதறி கிடந்தன. பலியானவர்களில் 10 பேர் விவரங்களை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெயர் வருமாறு:-
1. பங்கஜ் மேத்தா, 2. சாயாமேத்தா, 3. எச்.டி. நாகராஜா, 4. எஸ். நாகராஜா, 5. ஐ. நாகராஜா, 6. எல். நாகராஜா, 7. டி. தலோ சுப்ரிசும், 8. டி.பி. தலோ சுப்ரிசும், 9. நாகராஜா தலோ சுப்ரிசும், 10. பி. தலோ சுப்ரிசும்.
விபத்து நடந்த இடத்தில் உடல்களை மீட்டு வர காட்மாண்டுவில் இருந்து ஹெலி காப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அந்த இடத்தில் தரை இறங்க முடியாமல் திரும்பியது.
ஆனால் உள்ளூர் போலீசாரும், மலைவாழ் மக்களும் சம்பவ இடத்துக்கு நடந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 10 பேர் இந்தியர்கள் என்பதால் அவரது உடல்களை மீட்பதில் காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment