Monday, September 19, 2011

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் – விக்கிலீக்ஸ்!

Monday, September 19, 2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளது.

2009 ஜனவரி 20ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரையில் 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் 10000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் இழப்பு குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிர்ந்துகொள்ளவில்லை என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெப்ரவரி மார்ச் மாதங்களில் இந்த எண்ணிக்கை 63 வரையில் உயர்வடைந்ததாகவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாததில் நாள் ஒன்றுக்கு சாசரியாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 எனவும், பெப்ரவரியில் இந்த எண்ணிக்கை 145ஆகவும், மார்ச்சில் அந்த எண்ணிக்கை 115 ஆகவும் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மருத்துவர்கள், மதகுருமார், உதவி அரசாங்க அதிபர்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கடமையாற்றிய 213 உள்நாட்டு பணியாளர்கள் போன்ற தரப்பினரிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல்களைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவை நம்பகமானவை எனவும் ரொபர்ட் ஓ பிளக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு கரையோரப் பகுதி வழியான இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் அறிவித்த பெப்ரவரி 12ம் திகதி வரையில் 2452 பேர் கொல்லப்பட்டதுடன், 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

யுத்த சூன்ய வலயங்களின் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

தேவாயலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 சிறுவர்களை புலிகள் பலவந்தமான முறையில் படையில் இணைத்துக் கொண்டதாக ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment