Saturday, September 03, 2011
புலிகளுக்கு எதிராக 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமாயின் அது குறித்து விசாரணை நடத்த முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையில் பெரும்பாலான வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொண்டதாக தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட பேட்டியில் ரஜீவ் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் ஐநா தர்ஸுமன் குழு வெளியிட்ட அறிக்கையும் முட்டாள்தனமானதென ரஜீவ ஆவேசமாகக் கூறியுள்ளார்.
அதிகம் பொது மக்கள் கொல்லப்பட்டனர், வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, மக்கள் பட்டினி கிடந்தனர் போன்ற அனைத்துத் தகவல்களும் முட்டாள்தனமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கவனம் செலுத்தக் கூடிய சில விடயங்கள் உள்ளதென அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த சரியான ஆதாரம் இருந்தால் அதன் மீது கவனம் செலுத்த முடியும். ஆனால் அடிப்படையற்ற விடயங்கள் குறித்து விவாதிக்க முடியாது என ரஜீவ கூறியுள்ளார்.
ஐநா பொது சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர்கள் இம்மாதம் நடைபெறவிருப்பதால் இதுவொரு கடினமான மாதம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், சனல் 4 காணொளி மற்றும் தருஸுமன் அறிக்கையின் பின் சர்வதேச விசாரணைக்கு இலங்கை வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையை சமர்பித்த பின் அதன் பரிந்துரைகள் பற்றி கவனம் செலுத்தப்படும் என ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில நடந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment