Monday, September 12, 2011

4-ம் இணைப்பு:- விருதுநகரில் அரசு பஸ்சுக்கு தீ வைப்பு : ராமநாதபுரத்தில் 25 அரசு பஸ்கள் உடைப்பு!

Monday, September 12, 2011
பரமக்குடி: மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களது உடல்களை இன்று அடக்கம் செய்யவிருப்பதால் மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் ஜெ., சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்படுவதாக சட்டசபையில் அறிவித்தார். இதற்கிடையில் இன்று ( திங்கட்கிழமை) மதியம் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் சாத்தூர் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர்.

ராமாநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 25 அரசு பஸ்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் மற்றும் சிவகங்கை சென்ற 2 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் அரசு பஸ்கள் செல்லாததால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மறியலின்போது வெடித்த கலவரம் : இம்மானுவேல்சேகரன் நினைவு நாளில் பங்கேற்க பரமக்குடி புறப்பட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வல்லநாடு அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடியில் இவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல வலியுறுத்தியபோது போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் மீது கற்கள் கம்பு வீசப்பட்டது. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர்புகை வீசினர். இருந்தும் பயனில்லை. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போலீஸ் டி.ஐ.ஜி., டி.எஸ்.பி., உள்ளிட்ட 8 போலீசார் காயமுற்றனர். மதுரை ரிங் ரோட்டிலும் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த இரு வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் போலீசாரின் தாக்குதலில் காயமுற்ற பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்: இந்நிலையில் பலியானவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தொடர்ந்து அடக்கம் செய்யப்படும் போது வன்முறை ஏதும் வெடிக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கும் பதட்டம் நிலவுகிறது.

பலர் மாயம்; போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் உறவினர்கள்: நேற்று நடந்த கலவரத்தின்போது பல பகுதிகளிலும் இருந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் வந்திருந்தனர். இதில் சிக்கியவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் மதுரை ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்து வருகின்றனர். பலர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு அழுதபடி உள்ளனர்.

ரயில்வே பொருட்கள் நாசம் : பரமக்குடியில் ரயில்வே பொருட்கள் கடும் சேதமுற்றிருக்கிறது. வன்முறை காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. லெவல் கிராசிங்கில் கம்பிகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை வைத்திருந்த டெட்டனேட்டர்கள், எமர்ஜென்சி பாக்ஸ்கள், கொடிகள், மற்றும் லைட்டுகள் வன்முறைக்கும்பலால் சூறையாடப்பட்டது. பொன்னையாபுரம் ரயில்வே கேட்டில் உள்ள ஆவணங்கள் தீக்கிரையாகின. இதனையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ பாதுகாப்புடன் ரயில்கள் இயக்கப்பட்டன.

இறந்தவர்கள் யார் ? யார் ? : துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு: ராமநாதபுரம் மாவட்டம் நைனார்குளம் அருகே உள்ள பல்வராயனேந்தல் பகுதியை சேர்ந்த கணேசன் , பரமக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி ( 65 ) , பன்னீர்செல்வம் (50) , ஜெயபால்,, கீழக்கொடுமலூரை சேர்ந்த தீர்ப்புக்கனி (32) , மேல் ஆய்க்குடியை சேர்ந்த செல்வக்குமார் ஆகியோரது உடல்கள் பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரதேச பரிசோதனை நடக்கிறது. பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பள்ளி- கல்லூரிகள் விடுமுறை: மாவட்டத்தில் மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க பள்ளி- கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காளையர்கோவில், திருப்புவனம், மானாமதுரை பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேர் மீது வழக்கு: பரமக்குடி கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி.பி., ஜார்ஜ் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறார்.

No comments:

Post a Comment