Monday, September 12, 2011

5-ம் இணைப்பு:- துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி எதிரொலி : தென் மாவட்டங்களில் பதற்றம் நீடிப்பு!.

Monday, September 12, 2011
பரமக்குடி: பரமக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானதை தொடர்ந்து தென்மாவட்டங்களில் பதற்றம் நீடிக்கிறது. பல இடங்களில் மறியல் நடந்தது. பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் ஏராளமானோர் பரமக்குடி வந்தனர். இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்துவதற்கு போலீசார் திடீரென தடை விதித்தனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்த ஜான்பாண்டியனை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

இந்த தகவல் பரவியதும், அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்து முனை சந்திப்பு சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டோருடன் டிஐஜி சந்தீப் மிட்டல், சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோதல் வெடித்து கலவரமாக மாறியது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 கடைகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வண்டி, சுகாதாரத்துறைக்கு சொந்தமான ஒரு ஜீப், 3 ஆம்புலன்ஸ்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதமடைந்தன. மேலும் 8 போலீஸ் வாகனங்கள், பல பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதன்பிறகும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து பரமக்குடியை சேர்ந்த ஜெயபால் (20), பன்னீர்செல்வம் (50), கணேசன், நயினார்கோவில் அருகே வல்லத்தை சேர்ந்த செல்வகுமார் (26) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பன்னீர்செல்வம், ஜெயபால் உடல்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், கணேசன், செல்வகுமார் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன. பலியானவர்களுக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்தே அவர்கள் யார் என்பதை போலீசாரால் அடையாளம் காண முடிந்தது.

துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி, வழியிலேயே இறந்தார். இளையான்குடியை சேர்ந்த தீர்ப்புக்கனி (23) என்பவர், இளையான்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை சிந்தாமணி பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு வாகனங்களில் சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 25 போலீசார் உள்பட 75க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். டிஐஜி சந்தீப் மிட்டல், துணை கமிஷனர் செந்தில்வேலன், பரமக்குடி டிஎஸ்பி கணேசன் உள்பட 30 போலீசார் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த ஏடிஜிபி ஜார்ஜ், பரமக்குடிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரையில் முகாமிட்டுள்ள அவர் நிலைமைகளை கண்காணித்து வருகிறார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மாவட்டங்களில் நேற்று இரவு பெரும்பாலான பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இன்று காலை 6 மணிக்கு மேல்தான் பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மயான அமைதி நிலவுகிறது. பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் உடைப்பு

கோவில்பட்டி, சங்கரன்கோவில், நெல்லை, ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. சங்கரன்கோவிலில் இருந்து நேற்றிரவு மானூர் வழியாக நெல்லை சென்று கொண்டிருந்த 3 அரசு பஸ்களை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில், பஸ் கண்ணாடிகள் நொறுங்கின. நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment