Monday,September,05,2011
வாஷிங்டன்: இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அல் கய்தா தீவிரவாதிகள் 2001 செப்டம்பர் 11ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். விமானங்களை கடத்தி, மிக புகழ்பெற்ற இரட்டை கோபுரங்களை தகர்த்தனர். இதில் 3,000க்கும் அதிகமானோர் பலியாயினர். அதன் 10ம் ஆண்டு நினைவு தினம் வரும் 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், அமெரிக்காவில் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. எனினும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. தற்போதைக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த மிரட்டலும் இல்லை. எனினும், இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment