Wednesday, September 7, 2011

சென்னை : சினிமா தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்னை தொடர்பாக முடிவு ஏற்படாததை அடுத்து நவம்பர் 1ம் தேதி முதல், சினிமா ஸ்டிரைக்!

Wednesday, September 07, 2011
சென்னை : சினிமா தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்னை தொடர்பாக முடிவு ஏற்படாததை அடுத்து நவம்பர் 1ம் தேதி முதல், சினிமா ஸ்டிரைக் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) முதல் 4 மாநில மொழி படங்களுக்கு பூஜை போடுவது இல்லை என்றும் பிலிம்சேம்பர் கூட்டத்தில் அதிரடி முடிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த 24 சங்கங்கள் இணைந்து, பெப்சி என்ற அமைப்பில் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பிலுள்ள சில சங்கத்தினர், கடந்த சில மாதங்களாக தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருகின்றனர்.

சில படப்பிடிப்புகளில் அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள், புதிய சம்பளம் கொடுத்தால்தான் பணிபுரிவோம் என்று சொல்லி, பழைய சம்பளத்தை வாங்க மறுத்தனர். இதனால், சில சிறு பட்ஜெட் படங்களின் ஷூட்டிங் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதில் பெருநஷ்டம் அடைந்த அப்பட தயாரிப்பாளர்கள், சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்பதாகச் சொல்லி, அவ்வளவு சதவீத சம்பளத்தை தங்களால் தர இயலாது என்று அறிக்கை விடுத்தனர்.

இதை பெப்சி அமைப்பைச் சேர்ந்த சில சங்கத்தினர் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் அவசர செயற்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அதில், சினிமா தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வு குறித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படவுலகினர் கூடி ஆலோசனை செய்தனர். முடிவில் அவர்கள் சொன்ன சம்பள விகிதத்தை சினிமா தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், சம்பள உயர்வு பிரச்னையில் நிரந்தர தீர்வு காண முடியாமல் இழுபறியும், பிரச்னையும் ஏற்பட்டது.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டுக் கூட்டம், சென்னை அண்ணாசாலையிலுள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படவுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிலிம் சேம்பர் தலைவர் சி.கல்யாண் தலைமை தாங்கினார். பின்னர் இக்கூட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 மாதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மூலம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் புதிய சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக, தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த அமைப்புகள் அதிகபட்சமான, வரைமுறையற்ற ஊதிய உயர்வினை அறிவித்துள்ளனர்.

ஆனால், கர்நாடகாவில், தொழிலாளர் சம்மேளனத்துடன் நடந்த ஊதிய ஒப்பந்தத்தில், 10 முதல் 28 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வினை அளித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மும்பையில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஊதிய விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு மட்டும் வரைமுறையற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் வாங்குவதால், தயாரிப்பாளர்கள் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், தென்னிந்திய மொழிகளை, அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் இணைந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில், வரும் 7ம் தேதி முதல் (நாளை) புதுப்படங்களுக்கு பூஜை போடுவது இல்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், அதற்கான பணிகளை, அக்டோபர் 31ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், எங்களுக்கு விருப்பமான எந்த பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களையும், பணியில் அமர்த்திக் கொள்ளவோ அல்லது தேவையான ஆட்களை மட்டும் பணியில் அமர்த்திக் கொள்ளவோ எங்களுக்கு முழு உரிமை உள்ளது. கர்நாடகாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள புதிய ஊதிய உயர்வை அடிப்படையாகக் கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, கலைப்புலி ஜி.சேகரன், பன்னீர்செல்வம், கே.ஆர்.ஜி., கேயார், ஹேம்நாக் பாபுஜி, காட்ரகட்ட பிரசாத், கதிரேசன், சுபாஷ் சந்திரபோஸ், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், கே.முரளிதரன், ஹெச்.முரளி, அன்பாலயா பிரபாகரன், எம்.கபார், கே.பாலு, பி.எல்.தேனப்பன், ஜெயதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 14 வருடத்துக்கு முன்பு, 1997&ம் ஆண்டு, இதே போல சினிமா ஸ்டிரைக் ஏற்பட்டது. அது ஆறு மாதம் வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அமீர் ஆவேசம்

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் அமீர் கூறியதாவது: இது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. எங்களை கட்டுப்படுத்தாது என்றே நினைக்கிறேன். தயாரிப்பளர் சங்கத்தில் இருக்கிற நிர்வாக கோளாறுதான் இதற்கு காரணம். அங்குள்ள நிர்வாகிகள் ராஜினாமா செய்த பிறகு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது என நினைக்கிறேன். இவ்வாறு அமீர் கூறினார்.

படப்பிடிப்பு நிற்காது

இந்த ஸ்டிரைக் பற்றி பெப்சி அமைப்பின் செயலாளர் ஜி.சிவா கூறும்போது, ‘‘இந்த அறிக்கை சம்பந்தமாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறோம். படப்பிடிப்பு வழக்கம் போல் நடக்கும். சம்பள உயர்வு கேட்டு படப்பிடிப்பை நிறுத்த மாட்டோம். இது தொடர்பாக எங்கள் அமைப்பில் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது‘‘ என்றார்.

No comments:

Post a Comment