Sunday, August 28, 2011

புது தில்லி மகாநாடு - ஈ.என்.டி.எல்.எப். அறிக்கை!!!

Sunday, August 28, 2011
ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியுள்ள பேராபத்தை அறிந்து அதனைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்று ஆராயப்பட்டது. 2009, மே மாதத்தின் பின்னர் சிங்கள இனத்தின் குறிப்பாக ஆளும் வர்க்கத்தின் அதீத பலம், தமிழ் இனத்தை பல வழிகளாலும் சின்னாபின்னம் ஆக்கி வருகிறது. தமிழர்களை சிங்களவர்கள் வெற்றிகொண்டதாக சிங்கள இனத்தவர் மத்தியில் இனத்துவேசத்தை விதைத்து மகிழ்ச்சியை கொண்டாட அரசாங்கமே தூண்டியது. தமிழர்கள் நசுக்கப்பட அரசு ஊக்கத்தைக் கொடுத்தது, படைகள் மூலமாகவும், சிங்கள வெறியர்கள் மூலமாகவும் தமிழ் இன அழிப்பை அரசாங்கம் தடை ஏதும் இன்றிச் செய்து வருகிறது. இந்த இன அழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவே ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) முற்பட்டது.

எங்கள் இனத்துக்கான பிரச்சினைகளில் தலையிட்டு எங்களைக் காக்கக்கூடிய தகுதி இந்தியாவுக்கே உண்டு. இந்தியாவை மீறி மேற்கத்தைய நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுமா என்ற கேள்விக்கு இதுவரை விடைகாண முடியாமல் உள்ளது. இதற்கான விடையைக் கண்டு பிடிக்கும் போது சிலவேளை எங்கள் இனத்தவர் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டுவிடுவர். அதற்கான பணிகளைத்தான் சிங்கள அரசு இப்போது மேற்கொண்டு வருகிறது. அதற்கான உதாரணங்களே திருகோணமலை, நாவாந்துறை சம்பவங்களாகும்.

ஈழத்தின் எங்கள் பூர்வீகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அந்த மண்ணுக்கு உரியவர்களான எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவை இரண்டுக்காகவும் ஈ.என்.டி.எல்.எப். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொண்டது.

இந்தியப் பிரதம மந்திரி உள்பட முடிவெடுக்கும் அதிகாரங்கள் கொண்டவர்களுடன் பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. யுத்தத்தை நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச நிபந்தனைகளைக் கூட விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியாவையும் தாண்டி தங்களுக்கு மேற்கத்தைய உதவிகள் வந்து சேரும் என்று முல்லைத் தீவுக் கடற்கரையில் காத்திருந்தனர் புலிகள். விளைவு ஏமாற்றத்தில்தான் முடிந்தது.


அந்த உச்சக்கட்ட அழிப்பின் போது வராத மேற்குலகம் இப்போது எப்படி உதவிக்கு வரும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சனல் 4 ஒலிப்பரப்பிய மனித உரிமை மீறல்களை விசாரிக்க மேற்குலகம் உதவிக்கு வரலாம். அந்த விசாரணை மூலம், ராஜபக்சே தண்டிக்கப் படலாம். இதனால் தமிழ் இனத்துக்கு உரிமைகள் கிடைத்து விடுமா? ஆ. ராஜபக்சே போனால் ளு. ராஜபக்சே வரலாம், அல்லது டீ. ராஜபக்சே வரலாம் எப்படியாயினும் சிங்கள ஜனாதிபதி ஒருவர் வந்து அவரது பணியை மேற்கொள்வார். இதனால் தமிழ் இனத்தின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை.

அதேவேளை, யுத்தக் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் மாற்றுக் கருத்துடையவர்கள் அல்ல. யுத்த, அத்துமீறல்கள் விசாரிக்கப்படுவதனால் சில நபர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள். அதேவேளை விசாரணை ஆண்டுக்கணக்கில் நீடித்தால் “நீடிக்கும்” எங்கள் இனம் அனைத்தையும் இழந்துவிடும் சிங்கள அரசுப் படைகளால்.

எனவேதான் ஈ.என்.டி.எல்.எப். அதில் கவனம் செலுத்தாது (யுத்த விசாரணையில்) மக்களையும் மண்ணையும் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியது. 2011, ஜனவரி, 16ம் திகதி சென்னையிலிருந்து புது தில்லி வரை ஈ.என்.டி.எல்.எப். பாதயாத்திரை மேற்கொண்டது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா நேரிடையாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து 2500 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு எங்களது வேண்டுகோள் கையளிக்கப்பட்டது. 68 நாட்கள் தொடரப்பட்ட இந்த யாத்திரையின் முடிவில் எங்களது வேண்டுகோளாக இரண்டு முக்கிய கோரிக்கைகளை இந்திய அரசின் தலைவர்களிடமும், எதிர்கட்சித் ;தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டது. அவை:-

(01) “இந்திய-இலங்கை” (1987ஆம் ஆண்டு) ஒப்பந்தத்தினை இந்தியா முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

(02) 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் (சுதந்திரத்துக்குப் பின்னர்) தமிழர் பகுதிகளில் தமிழரது விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை உடனே வெளியேற்ற வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளும் புதிய கொள்கைகள் அல்ல, “இந்திய-இலங்கை”ஒப்பந்தமானது “செல்வா-பண்டா” ஒப்பந்தம் ;போன்று கிழித்து வீசப்பட்ட ஒப்பந்தம் அல்ல. இரண்டு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் ஒன்றினை, உள்ளுர் நீதிமன்றம் ரத்துச் செய்ய முடியாது. இலங்கையில் இது போன்ற கோமாளித்தனங்களை நிறைவேற்றுவதில் ஆச்சரியம் இல்லை.

இந்தியா ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக இருந்தால் “புதிய கொள்கைகளையும், விவாதத்திற்கு உரிய கோரிக்கைகளையும்” முன்வைத்து ஈழத் தமிழர்கள் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்பது ஈ.என்.டி.எல்.எப். இன் கொள்கையாகும்.

அமரர். இராஜீவ்காந்தி அவர்கள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை நிறைவேற்றித் தரும்படி காங்கிரஸ் அரசிடம் கோருவதில் தவறொன்றும் இல்லை! இந்தக் கோரிக்கையை முன்வைக்க ஈழத் தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் ஈழத் தமிழர்கள் சார்பாகத்தான் ராஜீவ்காந்தி அவர்கள் கையெழுத்திட்டார்கள்.

சிங்கள அரசு, விடுதலைப் புலிகள், தமிழ்நாட்டின் புலிகள் ஆதரவுக் கட்சிகளால் வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய தீர்வு (ஒப்பந்தம்) தோல்வியில் முடிந்தது. இந்த மூன்று தரப்பினரும் ஓரணியில் கைகோர்த்து நின்று தமிழர் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் நாசம் செய்தனர் என்றால் அது மிகையல்ல!

வடகிழக்கு மகாண அரசை குழப்பாமல் இருந்திருந்தால்,; இராஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், சிங்கள அரசே தமிழர்கள் தனிநாடு ஒன்றினை பெறுவதற்கு வழி சமைத்துக் கொடுத்திருப்பார்கள். அதனை கெடுத்ததும் மேற்சொன்ன மூன்று தரப்பினரும்தான்.

இந்தியா எங்கள் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு கடந்த காலம் போன்ற அனுபவத்தை மீண்டும் பெற விரும்பவில்லை.

எனவேதான் “ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு வந்தால்” இந்தியா தனது முந்தைய நிலைப்பாட்டைத் தளர்த்தி மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கும்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினர் (ஈ.என்.டி.எல்.எப்.) 2500 கிலோ மீற்றர் நடைபயணம் மேற்கொண்டு கையளித்த கோரிக்கையின் அடிப்படையில்தான் டெல்லி மகாநாடு டொக்டர். ஈ.எம். நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எங்கள் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இந்த இரண்டும் இன்றைய தவிர்க்க முடியாத உடனடித் தேவையாகும்.

தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துக்கு மட்டும் உரித்துடையவர்கள் அல்ல, தனிநாட்டுக்கே உரித்துடையவர்கள். ஆனால் இதுபற்றி இந்தியாவிடம் பேசுவதற்கு இப்போது சரியான நேரமல்ல.

தமிழ் கட்சிகள் அழைக்கப்பட்டது தனிநாடு பற்றிப் பேசவோ அல்லது சுயநிர்ணய அதிகாரம் பற்றி பேசவோ அல்ல என்பதனைத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு ஏகோபித்த கருத்தொற்றுமையை தெரியப்படுத்தினால் இந்தியா அதுவிடயத்தில் தலையிடும்.

உடனடி சாத்தியமற்ற, விவாதத்துக்குரிய பிரச்சினைகளை முன்வைத்தால் இழப்பு எங்கள் இனத்துக்குத்தான். சாத்தியமானவற்றை நாம் நிறைவேற்றிக் கொண்டால் எங்கள் இனம் பாதுகாக்கப்படும். அறிவைப் பயன்படுத்துவதை விடுத்து, தாங்கள் கொள்கை வீரர்கள் என்று புலிகளின் கொள்கையை மீண்டும் நிலைநாட்டத் துடிக்கும் வேங்கைகளாக வந்திருந்த நபர்கள் செயற்பட்டனர். எதனை முன்வைத்தால் இந்த மகாநாடு குழம்பும் என்று தெளிவாக அறிந்து இப்போது தவிர்க்க வேண்டிய கோரிக்கையை முன்வைத்தனர்.

தீர்வொன்றுக்கு ஏகோபித்து வரமுடியாமல் போனதையிட்டு இந்த நபர்கள் மகிழ்ச்சி அடைந்து சென்றனர். இவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று தெரிந்தும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களது முன்னைய கொள்கையிலிருந்து இவர்கள் இன்னும் மாறவில்லை, தமிழர்கள் அழிவதைப் பற்றி இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகளிலிருந்து கைபேசிகளில் கிடைத்த தகவல்களைக் கொண்டுதான் இவர்கள் தங்கள் கோரிக்கை என்று முன்வைத்தனர்.

மேற்குலகம் இவர்களது சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரித்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன்வருமானால் நாமும் அதனை வரவேற்போம். அதேவேளை, அவர்களும் இறுதியில் இந்தியாவின் ஊடாகத்தான் வரவேண்டும் என்பதனையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

ஆயினும் இந்த நபர்களை நம்பி நாம் ஓய்ந்திருக்கப் போவதில்லை. அதேவேளை இந்திய மாநில வடிவிலான தீர்வு ஒன்றினை உயர்திரு. ஆனந்தசங்கரி அவர்கள் முன்வைத்தார்கள். இன்றைய காலகட்டத்தில் அந்தத் தீர்வு ஏற்படையது தான் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) கருதுகிறது. ஏனெனில் இந்தியா தனது மொழிவாரி மாநில கொள்கையில் சிலவற்றைத் தவிர நிர்வாகத்தை அதிகப்பட்சம் பகிர்ந்து அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
27-08-2011

No comments:

Post a Comment