Sunday, August 28, 2011

அக்டோபர் 08ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றும் பலப் பரீட்சையில் பிரதான கட்சிகள்!

Sunday, August 28, 2011
அக்டோபர் 08ஆம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழிருந்துவரும் இச்சபையைக் கைப்பற்ற இம்முறை என்றுமில்லாதவாறு கட்சிகள் பலவும் களத்தில் கங்கணம்கட்டி இறங்கியுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக

மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உட்பட மேலும் சில கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் இம்மாநகரைக் கைப்பற்றுவதற்காக போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் தலைமை மற்றும் முக்கிய வேட்பாளர்கள் சிலர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்த கருத்துக்களை அப்படியே தருகிறோம்.

மிலிந்த மொறகொட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

முதலில் கொழும்பு மாநகர சபையை வைத்து அரசியல் நடத்துவதைக் கைவிட வேண்டும். இது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு நிறுவனம். மக்கள் சபைக்குத் தாம் செலுத்தும் வரிப் பணத்திலிருந்து தமக்கான சேவையை எதிர்பார்க்கிறார்கள். அதிகாரிகள் அந்த மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து சேவை செய்யும் இந்த நிறுவனத்தில் அரசியல் நடத்த முனையக் கூடாது.

கொழும்பு மாநகர சபையைப் பொறுத்த வரையில் அதனை புகழ்பூத்த கல்விமான்கள், பேரறிஞர்கள், தனவந்தர்கள் எனப் பலர் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மாநகர சபையின் ஆட்சியில் பல முறைகேடுகள், ஊழல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையை இத்தேர்தலுடன் மாற்றிய மைத்து மீண்டும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சி சிறந்த கல்விமான்களிடம், சமூக சிந்தனையுள்ள பேரறிஞர்களிடம் செல்ல வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

ஏ.ஜே.எம். முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு மாநகர மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளனாக நான் களமிறங்கியுள்ளேன். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் குறைபாடுகளை இந்த அரசு இன்னுமே நிவர்த்திக்கவில்லை. அவர்கள் மாற்றாந்தால் மனப்பாங்குடன் நோக்கப்படுவதன் ஒரேயொரு காரணம் ஐ.தே.கவின் அசைக்க முடியாத ஆதரவாளர் களாகவிருப்பதே. இலங்கையின் இதயமெனப் போற்றப்படும் கொழும்பு மாநகரத்தை கைப்பற்ற அரசாங்கம் மேற்கொண்ட எல்லாப் பிரயத்தனங்களும் தோல்வி கண்ட நிலையில் இம்முறையாவது அதனைக் கைப்பற்றிவிடலாமெனக் கனவு காண்கின்றனர்.

கொழும்பு மாநகரம் ஐ.தே.கவின் பக்கம் போய்விடுமோ என்ற அச்சம் இன்று பலருக்கு வந்துவிட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரித்து சின்னா பின்னமாக்கும் நோக்கில் சில உதிரிக் கட்சிகளும் குழுக்களும் களமிறங்கியுள்ளன. அரசாங்கத்துடன் இருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் கூட தனித்துக் களமிறங்குவது இந்தக் காரணமே.

குருந்துவத்தையையும் காலி வீதியை அழகுபடுத்துவதை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் சேரிப்புற மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாமல் சேரிப்புற மக்களின் வாழ்விடங்களை அபிவிருத்தி செய்யாமல் இருப்பதன் உள்நோக்கம் தான் என்ன? இந்த மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன. இதை கொழும்பு வாக்காளர்கள் நினைவில் இருத்த வேண் டும். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இந்த மக்கள் தொடர்ந்தும் கொழும்பில் நிம்மதியாக வாழவேண்டும். நான் நீண்ட காலமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். மாகாண சபை உறுப்பினராக விருந்து சேவை செய்கின்றேன். இந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். எனவே இந்த மக்களின் நல்வாழ்வுக்காக நான் பெரிதும் உழைப்பேன்.

மனோகணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி

அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிப்பில் கட்டாயம் கலந்துகொண்டு, தங்களது வாக்குகளை ஏணி சின்னத்திற்கு வழங்க வேண்டும். இதன் மூலமாகவே கொழும்பு மாவட்ட தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தியை வெளிக்காட்ட முடியும். இதுவே எனது முதல் கோரிக்கை யாகும். வாக்குரிமையுள்ள அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிப்பில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே கொழும்பு மாவட்டத்தில் தலைநகர தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தியை எடுத்துக்காட்ட முடியும். இதுவே இத்தேர்தல் தொடர்பிலே எனது கோரிக்கையாகும்.

வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பிற்குத் தேவையான அரை மணித்தியாலத்தை ஒதுக்குவதில் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலைமை எதிர்வரும் தேர்தலிலே கட்டாயமாக மாறியே ஆகவேண்டும்.

தலைநகர் பிரதேசத்தில் எமது ஜனநாயக வாக்கு பலத்தின் மூலமாக அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் எம்மை திரும்பிப் பார்க்கவைக்க வேண்டும். தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் கிள்ளுக்கீரைகளாகவும் நினைக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும்.

சபீக் ரஜாப்தீன்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அரசாங்கத்தில் நாம் அங்கம் வகித்த போதிலும் கொழும்பு மாநகரத்தில் நாம் தனித்துப் போட்டியிடுவதற்கு பல காரணங்கள் உண்டு. கொழும்பு மாநகர் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தில் மு. காவுக்கு தனித்த வாக்கு வங்கியுண்டு. பல்வேறு தேர்தல்களில் நாம் அதனை நிரூபித்துக் காட்டியுள்ளோம். மர்ஹ¤ம் அஷ்ரஃபின் காலத்திலிருந்தே கொழும்பில் நாம் பிரதிநிதிகளைப் பெற்று வருகிறோம். கொழும்பு மாநகரசபையில் 6 உறுப்பினர் களைப் பெற்று சாதனை படைத்த நாம் வடக்கு- கிழக்குக்கு வெளியே கொழும்பிலே மு. கா. விலிருந்த பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள், கொழும்பு மாநகரசபையின் அபிவிருத்தியில் நாம் மேற்கொண்ட பணிகளின் வெளிப்பாடே எமக்குக் கிடைத்துவரும் வெற்றி. நான் ஒரு பிரபல வியாபாரியாக இருந்த போதும் மு. கா.வில் இணைந்து அரசியல் பணிகளை ஆற்றி வருகின்றேன். மு. கா. இத்தேர்தலில் கொழும்பில் ஆட்சியைப் கைப்பற்றினால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு அழுத்தத் தைக் கொடுக்கும் சக்தியாக விளங்குவதுடன் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுப் போம். வெறுமனே சில மாநகர சபை உறுப்பினர்களை நாம் கொழும்பில் பெற்றிருந்தும் நாம் ஆற்றிய சேவைகள் பலப்பல.

நான் மு. காவின் தேசிய அமைப்பாளர். மக்கள் சேவையே எனது நோக்கம். ஐக்கிய தேசியக் கட்சி இன்று வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. அக்கட்சியில் இன்று ஐக்கியமும் இல்லை. தேசியமும் இல்லை. எனவே சமாதானப் பாலமாக விளங்கும் மு.காவின் கரங்களைக் கொழும்பு மாநகர மக்கள் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருமதி யமுனா கணேசலிங்கம், ஐக்கிய மக்கள் சுதத்திர முன்னணி

சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டு சேவைகள் பல செய்துவரும் எனக்கு கொழும்பு வாழ் மக்களுக்கு மேலும் பல சேவைகளைச் செய்வதற்கு ஒரு அங்கீகாரம் அவசியமாகவுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே இத்தேர்தலில் களமிறங்க நான் முன்வந்தேன்.

காலஞ்சென்ற எனது கணவர் அமரர் க. கணேசலிங்கம் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், பதில் மேயர், மேயர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த காலத்தில் சபையின் நிர்வாக செயற்பாடுகளை மிகவும் நன்றாக அறிந்து வைத்துள்ளேன். அந்த மனத்துணிவு டனும் தைரியத்துடனும் இன்று நான் களம் இறங்கியுள்ளேன்.

கொழும்பு மாநகர சபை பல சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றது. ஆனாலும் அவை மக்களை முழுமையாகச் சென்றடை வதில்லை. இம்மாநகரிலே வாழ்கின்ற மக்கள் அச்சேவைகளை இலகுவாகவும், முழுமையாகவும் பெற்றுக்கொள்ள வழி அமைத்துக் கொடுப்பதே எனது இலக்காக உள்ளது. இதற்கு எனக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. கொழும்பு மாநகரிலே மாநகர சபையால் வழங்கப்படுகின்ற சகல சேவைகளையும் தங்களுக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.

No comments:

Post a Comment