Sunday, August 28, 2011

தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் அமுங்கிப் போயிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை:தமிழகத்திலிருந்து புதுடில்லிவரை வியாபித்துள்ள இலங்கைத் தமிழர் விவகாரம்!

Sunday, August 28, 2011
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் அமுங்கிப் போயிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான பிரசாரங்கள் ஆவேசமான பேச்சுக்கள் என்பன அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்ட சபைத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் காரசாரமாக சூடுபிடிக்கத் தொடங்கி தற்போது புதுடில்லி வரை வியாபித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் லோக்சபா உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு நாள் மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தமிழர்களின் சார்பில் எட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், தமிbழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., கல்முனை மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எவ் – சுரேஷ் அணி) சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எவ். – பத்மநாபா) சார்பில் பொதுச் செயலாளர் என். ஸ்ரீதரன் (சுகு), தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.

துரைரத்தினம், தமிbழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) சார்பில் அதன் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள் பவான், தர்மகுலசிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கஜேந்திரன், ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ. என். டி. எல். எவ்.) சார்பில் தலைவர் எஸ். ஞானசேகரன் (பரந்தன் ராஜன்), ரவிந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவற்றில் ஆறு தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகும். மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையுடன் முரண்பட்ட நிலையில் தொடர்ந்தும் தனித்து செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ. என். டி. எல். எவ்.) 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதுடன் அப்போது நடைபெற்ற மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டது.

இந்தியப் படையினரின் துணையுடன் அப்போது நடைபெற்ற மாகாண சபை மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் ஏனைய தமிழ்க் கட்சிகளை தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈ. பி. ஆர். எல். எவ். மற்றும் ஈ. என். டி. எல். எவ். என்பன வடக்கு கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றி அ. வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அப்போதைய வடக்கு, கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சியாக விமான விபத்தில் மறைந்த எம். எச். எம். அஷ்ரப்பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டது. எதிர்க் கட்சித் தலைவராக அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னர் இலங்கை அரசியலில் பிரதியமைச்சராக பதவி வகித்த ஷேகு இஸ்ஸதீன் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் அரசியல் பணிகள் எவ்வாறானவை என்பதற்கு அப்பால் ‘வேதாந்தி’ என்ற புனைபெயரில் ஈழத்து தமிழ்க் கவிதைக்கு பெருமை சேர்த்தவர் என்பதை எவரும் மறைக்க முடியாது.

இவையெல்லாவற்றுக்குமப்பால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கும் புலிகள் அமைப்பினருக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து இந்தியப் படையினருடன் நெருங்கிச் செயற்பட்ட ஈ. பி. ஆர். எல். எப்., ரெலோ, ஈ. என். டி. எல். எவ். அமைப்பினரும் இந்தியாவிற்கு இந்தியப் படைகளுடன் வெளியேறிச் சென்றனர்.

பின்னைய நாட்களில் ஈ. பி. ஆர். எல். எவ்., ரேலோ அமைப்பினர் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் படிப்படியாக இணைந்து தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் இந்தியப் படைகளின் வெளியேற்றத்திற்கு பின்னர் தமிழகத்தில் தங்கியிருந்த ஈ. என். டி. எல். எவ். அமைப்பினர் இலங்கையின் ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் எதிலும் பங்கேற்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன இரை மீட்டிப்பார்க்க வேண்டிய விடயங்களாகும். அவையொவ்வொன்றும் அழிந்து போகக்கூடிய வரலாற்று அத்தியாயங்களில்லை.

அதேநேரம் இந்திய காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பா தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய ஆட்சியில் அமைச்சு பதவியைப் பெற்றுச் செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ. பி. டி. பி) வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியென்ற போதிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

அவ்வாறே மலையக தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் என்பவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் பகுதிகளில் இராணுவத்தை நிறுத்தக்கூடாது, பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்ற வேண்டும், அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும், இவற்றையெல்லாம் நிறைவேற்ற இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை புதுடில்லி மாநாட்டில் கலந்துகொண்ட எட்டு தமிழ்க் கட்சிகளும் முன்வைத்துள்ளன.

இலங்கையின் இன நெருக்கடித் தீர்வுக்கான முயற்சிகளில் உரிய தீர்வு எட்டப்பட வேண்டுமெனில் இந்த விடயங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்றும் இவை தொடர்பில் உரிய கவனஞ் செலுத்தப்படுமென்றும் இது தொடர்பில் புலம்பெயர் சமூகத்தின் ஆலோசனைகள் பெறப்படுமென்றும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

தமிழகத்தின் ஆளுங் கட்சியான செல்வி ஜெயலலிதா ஜெயராமின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அவரின் தோழமைக் கட்சிகள் மாத்திரமன்றி வன்னி இறுதி யுத்த காலகட்டத்தில் கூட இந்திய மத்திய அரசை நோகடிக்காது கவிதை படித்துக்கொண்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன ஏட்டிக்குப் போட்டியாக தமிழகத்தில் மட்டுமன்றி தலைநகர் புதுடில்லியிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையிலேயே இந்த இருநாள் மாநாடு இடம்பெற்றுள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றதோர் விடயமாகும்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளாலும் மட்டுமன்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய பிரதான அரசியல் கட்சிகளாலும் விரும்பி நோக்கப்படுவது எந்த நோக்கத்தின் உள்ளடக்கத்தை கொண்டது என்பது கவனிக்கத்தக்கதோர் விடயமாகும்.

அதேநேரம் லோக்சபாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழர் பிரச்சினை அவர்களது மறுவாழ்வு என்பது தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று மத்திய அரசின் பங்காளிக் கட்சியும் ஊழல் மோசடி விவகாரத்தில் தனது அரசியல் அடித்தளத்தையே இழந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக லோக்சபா உறுப்பினர் டி. ஆர். பாலுவால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மீராகுமார் அனுமதி வழங்கிய போதும் ஊழல் விவாதத்தையே முதலில் விவாதிக்க வேண்டுமென்று பிரதான கட்சிகள் கோஷமிட்டதையடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மறுநாள் புதன்கிழமையும் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் விவாதத்துக்கான பிரேரணை முன்வைக் கப்பட்ட போதும் ஊழல் மோசடிக்கான மசோதாவை முன்வைக்கக் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே விவகாரம் தான் தற்போது மிகவும் அதனையே முன்வைக்க வேண்டுமென்று பாரதீய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததுடன் சபையில் குளப்பத்தையும் ஏற்படுத்தினர்.

இதனையடுத்து லோக்சபாவில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் பிரதிநிதிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலைச் சம்பவத்திற்கு பின்னர் வெறுத்தொதுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்திலிருந்து புதுடில்லி வரை வியாபித்துள்ள போதிலும் இலங்கையின் அரசியல், சமூக பொருளாதாரக் கட்டுமானங்கள் தொடர்பிலான விடயத்தில் இந்திய மத்திய அரசின் மெளனமான போக்கு எதை உள்Zர்த்து காட்டுகின்றது?

No comments:

Post a Comment