Sunday, August 28, 2011

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அவர்கள் அவசரவால நிலையை நீக்குவது தொடர்பாக மேற்கொண்ட அறிவிப்பை நாம் வரவேற்கிறோம்-பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்!

Sunday, August 28, 2011
இலங்கை பாராளுமன்றத்தில்(25-08-2011) ஜனாதிபதி அவர்கள் அவசரவால நிலையை நீக்குவது தொடர்பாக மேற்கொண்ட அறிவிப்பை நாம் வரவேற்கிறோம். இதன் மூலம் கொடூரமான சட்டங்கள் அமுலில் இருந்த நிலையிலிருந்து இலங்கை மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அவசரகால நிலை கடந்த மூன்று தசாப்தங்களாக இருந்து வந்திருக்கிறது. புலிகள் மற்றும் ஜே.வி.பி ஆகியவற்றுக்கு எதிரான யுத்த நடவடிக்கையின் போது அரசின் இந்த அவசரகால நிலை குறிப்பிட்டளவு நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் அதேவேளை இந்தச் சட்டங்கள் கண்மூடித்தனமான கொலைகள், தன்னிச்சையான கைதுகள் காலவரையற்ற சிறைவாசங்கள், சிறையில் அடைக்கப்பட்டோரை யாரும் பார்க்க முடியாத நிலைமைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டமையை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் உம் இந்த அவசரகால நிலையை நீக்குவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது ஜனநாயக அம்சங்களை பரவலாக்குவதற்கும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் நிலையை விரிவு படுத்துவதற்கும் அவசியமான ஒரு முன்னெடுப்பாக அமையுமென நாம் மனதார நம்புகின்றோம். அதனையே இலங்கையின் அனைத்து மக்களும் நீண்டகாலமாக வேண்டி நின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த திருப்புமுனையான காலகட்டத்தில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்த நாங்கள் அரச அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் மிகவும் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் தமது அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நாட்டின் அரசியல் முறைமையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இந்த நாட்டின் சமூக அரசியல் பங்காளர்கள் அனைவரும் இந்த நாட்டின் அனைத்து தேசிய இனங்களும் இந்த நாட்டை தமது தேசமென ஒருமுகமாக எண்ணும் வகையான வளர்ச்சியை அடைவதற்கு அவசியமான அரசியல் தீர்வொன்றை எய்துவதற்கு வேண்டிய சூழலை உருவாக்கி முன்னேற்றுவதில் பொறுப்போடு பங்களிக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொள்கிறோம்.

அ. வரதராஜப்பெருமாள்
முன்;னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

No comments:

Post a Comment