Sunday, August 28, 2011

ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை அகதிகள் முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு!

Sunday, August 28, 2011
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு வருகிற 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்ட அகதிகள் முகாம்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தும் 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அவர் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். தூக்கு தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஜனாதி பதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர். நீண்ட காலமாக நிலுவை யில் இருந்த மூவரின் கருணை மனுக்களை சமீபத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார்.கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜன், நேற்று வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பியிடம் கொடுத்தார்.

வரும் 9ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றபட உள்ளதாக மூன்று பேரிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிறை வாசலில் ஒரு டிஎஸ்பி தலைமையில் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கமாண்டோ படையும் குவிக்கப்பட்டு உள்ளது. சிறை வளாகத்தில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சிறை முன்பு கண்காணித்து வருகின்றனர். சிறையை சுற்றியுள்ள சாலைகளில் 4 இடங்களில் தடுப்புகள் அமைத்து, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது.
வேலூர் மாநகர் முழுவதும் சாலையோரங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள், வேலூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்த மின்னூர், சின்ன பள்ளிகுப்பம், குடியாத்தம், மேல்மொணவூர், பாலாறு அணைக்கட்டு, பாணாவரம் ஆகிய 6 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அத்தியேந்தல், அடி அண்ணாமலை, சொரகொளத்தூர், தென்பள்ளிப்பட்டு, கஸ்தம்பாடி, எலத்தூர், புதுப்பாளையம், குன்னத்தூர், வேலப்பாடி, பையூர், பாப்பந்தாங்கல், தவசி, ஒசூர் ஆகிய 13 இடங்களிலும் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.

இந்த 19 முகாம்களிலும் சுமார் 7,500 பேர் அகதிகளாக உள்ளனர். அனைத்து அகதிகள் முகாம்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் வேலூர் மாவட்டம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment