Sunday, August 28, 2011

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம்!

Sunday, August 28, 2011
லிபிய தலைநகர் திரிபோலியின் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்க நகரை பதவியில் இருந்து விரட்டப்பட்ட அதிபர் கடாபி, அமைத்துள்ள தகவல் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபிக்கு எதிராக பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. ராணுவ உதவியுடன் கடாபி அதை ஒடுக்க முயன்று வந்தார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலியை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உதவியுடன் புரட்சி படையினர் கைப்பற்றினர். அதிபர் மாளிகை குண்டு வீசி தரை மட்டமாக்கப்பட்டது. எனினும், கடாபி பிடிபடவில்லை.

இதையடுத்து, கடாபியை தேடும் பணியில் கிளர்ச்சிக் குழுக்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இடிந்து தரைமட்டமான கடாபியின் மாளிகையான பாப் அல்&அசிசியாவின் இடிபாடுகளை நீக்கும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியில் இடிபாடுகளை அகற்றும்போது பாதாள அறைக்கான வழி தெரிந்தது. அதில் இறங்கி பார்த்த கடாபி எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் சென்று பார்த்தபோது புதிர் போட்டியில் இந்த பக்கம் போய் அந்த பக்கம் வரும் சிக்கலான வரைபடம் போல, ஏராளமான வழிகள் ஏற்ற இறக்கங்களுடன் சுரங்க பாதை நீண்டது. கடாபியின் மாளிகையில் இருந்து இந்த சுரங்க வழியின் ஒரு பாதை திரிபோலி விமான நிலையத்துக்கும் வேறொரு வழி கடற்கரைக்கும் செல்லலாம் என கருதப்படுகிறது.

பாதாள வழியின் போக்கை பார்க்கும்போது தலைநகர் திரிபோலிக்கு அடியில் மற்றொரு நகரத்தையே கடாபி உருவாக்கியிருப்பதாக தெரிகிறது. இரண்டு பேர் ஒரே நேரத்தில் நடந்து செல்லக் கூடிய அளவில் உள்ள பாதாள வழியின் சுற்றுச்சுவர்கள் கான்கிரீட்டிலும் கதவுகள் இரும்பிலும் உள்ளன. ஓரிரு கி.மீ. தூரத்துக்கு ஒன்றாக ஓய்வு அறை இருக்கிறது. அது குண்டு துளைக்காத பதுங்கு குழியாக அமைக்கப்பட்டுள்ளது.

வழி நெடுகிலும் தகவல் தொடர்புக்கு நூற்றுக்கணக்கில் போன் இணைப்புகள் உள்ளன. அதன்மூலம் அவசர நேரங்களில் வெளியே ராணுவத்தினரை கடாபி தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது. பாதாள லோகத்தின் ஒரு இடத்தில்தான் கடாபி மறைந்திருக்க வேண்டும் என்று புரட்சி படையினர் கருதுகின்றனர். எனினும், கடாபி மாளிகை மீது நேட்டோ படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் சுரங்க வழியில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சுவர்கள் இடிந்து விழுந்து பாதையை மூடியுள்ளன.

எனவே, குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் கடாபியை தேடி புரட்சி படையினர் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். 1986ல் ஜெர்மனியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமெரிக்க படைகள் திரிபோலி மீது தாக்குதல் நடத்தின. அதுபோன்ற தாக்குதலில் இருந்தும், ரசாயன குண்டுகளில் இருந்தும் தப்பிக்க இதுபோன்ற பாதாள நகரத்தை 1986க்கு பிறகு கடாபி கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment