Tuesday, August 23, 2011

புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை அமெரிக்காவிடம் கையளிப்பு!

Tuesday, August 23, 2011
புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மனிதாபிமானப் போரின் உண்மை சார்ந்த அலசல்கள் என்ற தலைப்பிலான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகள் கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இவ்வறிக்கையின் பிரதிகள் அனுப்பவைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கடந்தமாத இறுதியில் அறிவித்திருந்தது.

இந் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வால் கடந்த முதலாம் திகதி கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட 161 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தின் சகல பிரிவினருக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க காங்கிரஸின் நூலகம்,பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சகல முகவர் நிலையங்களுக்கும் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்விகளை எழுப்புகின்ற இந்திய ஊடகவியலாளர்களையும் விரைவில் சந்தித்து போருக்கு பிற்பட்ட இலங்கையில் நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா செயற்படவில்லை, அமெரிக்காவிலுள்ள சில தீவிரவாத சக்திகளே அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன என அவர் குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment