Tuesday, August 23, 2011
இலங்கையின் பல பாகங்களிலும் கலக்கிக் கொணடிருக்கும் கிறீஸ் பூதங்கள் சர்ச்சை நேற்று யாழ்ப்பாணத்தையும் சென்றடைந்தது. யாழ் மாநகரின் புறநகர்ப் பகுதியான நாவாந்துறை மற்றும் வடமராட்சியின் வதிரி ஆலங்கட்டை-கொற்றாவத்தை பகுதிகளில் நேற்றிரவு பொதுமக்களுக்கும் படையினருக்குமிடையே மோதல்கள் இடம்பெற்றன.
நாவாந்துறையினுள் வீடொன்றினுள் படையினர் என சந்தேகிக்கப்படுபவர்கள் உள் நுழைந்துள்ளனர். இதையடுத்து மக்கள் ஒன்று திரளவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை வெளிப்படுத்தக் கோரி மக்கள் படைமுகாமை சுற்றி வழைத்துப் போராட்டத்தினில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை வெளிப்படுத்தக்கோரி போராட்டத்தினில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை நோக்கி படை முகாமினுள் இருந்து படையினர் வேட்டுக்களை தீர்த்ததாக கூறப்படுகின்றது. மேலதிகமாக பொலிசாரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தியதையடுத்தே தடியடி நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்
பொலிஸார். தடியடி நடத்தியதையடுத்து மக்கள் வீடுகளுக்கு கலைந்து சென்றிருந்தனர்;
சில வீடுகளில் கண்ணாடிகள் உடைத்து நொருக்கப்பட்டன. மேலும் சில வீடுகளில் நகைகள் மற்றும் பணம் இலட்சக்கணக்கினில் கொள்ளையிடப்பட்டதாகவும் குற்றஞ் சாட்டப்படுகின்றது. பிடித்து செல்லப்பட்டவர்கள் மீண்டும் பொலிஸ் நிலையங்களில் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இன்று பகுதி பகுதியாக நீதிமன்றஙகளில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த பதினேழு பேர் நேற்று மதியம் வரை யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டனர். உடலெங்கும் அடிகாயங்கள் மற்றும் கண்டல் காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நாவாந்துறையினில் பதற்றமான சூழல் தொடர்கின்றது. பெருமளவு படையினர் குவிக்கப்படடுள்ளனர். வீதிகள் வெறிச்சோடிப் போயுள்ளன. கடைகள் சந்தைகள் தேவாலயங்கள் மூடப்படடிருந்தன.
இதே போன்றே வடமராட்சியின் வதிரி ஆலங்கட்டை மயானத்தையண்டிய கொற்றாவத்தை பகுதிகளிலும்; அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இரவு வேளை வீடொன்றினுள் உள் நுழைந்துள்ளனர். பொதுமக்களிடம் அகப்பட்டுக் கொண்ட இக்கும்பலை வெள்ளை வானில் சென்றவர் மீட்டெடுத்துள்ளனர். குறித்த நபர்களை தம்மிடம் கையளிக்க மக்கள் கோரியதையடுத்த அங்கு வன்முறைகள் வெடித்திருந்தது.
இதேவேளை யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக காவற்துறையினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றிரவு நாவாந்துறைப் பகுதியில் கிறீஸ் மர்ம மனிதன் வந்துள்ளதாக பதற்றம் ஏற்பட்டதுடன், மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும நபர் இராணுவ முகாம் ஒன்றிற்குள் ஓடி ஒழிந்துள்ளதால், மக்கள் முகாம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த இராணுவத்தினர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதுடன், பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபர்களை கலைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment