

Thursday, August 25, 2011
தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியினரால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவையாவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தின் முழுமையான அபிவிருத்தியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்க முடியாது என்பதுடன் அதற்கு மக்கள் ஆதரவும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் பங்கும் முக்கியமானது.
இதன் மூலமே அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்படுமெனவும் அதற்காக அரசின் சார்பாக இப்பகுதியில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகரசபை பிரதேசசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர் என்பதுடன் இவர்களுடன் அரச திணைக்கள அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாகவே அபிவிருத்திப் பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க முடியுமெனவும் தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியினரால் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவையாவும் தேர்தலுக்கான பொய் வாக்குறுதிகள் என எதிர்கட்சியினர் பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்த போதிலும் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு மிகுந்த கவனத்தோடும் கரிசனையோடும் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமெனவும் இது எதிர்கட்சியினரின் பொய்ப்பிரசாரத்திற்கு சரியான பதிலடியாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வடபகுதியின் அபிவிருத்திக்காக 5 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 2.1 பில்லியன் ரூபாவில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலில் ஆளும்கட்சியினால் கைப்பற்றப்பட்ட ஊர்காவற்துறை நெடுந்தீவு வேலணை பிரதேச சபைகளையும் ஏனைய பிரதேச சபைகளையும் அம்பாந்தோட்டையை விடவும் சிறப்பான முறையில் அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் இங்கு வருகைதந்த போது பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தபோதிலும் முக்கியமாக புனரமைக்கப்பட்ட பல வீதிகளின் திருத்தப் பணிகளில் தமக்கு திருப்தி இல்லையென்று சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் அபிவிருத்திப் பணிகள் விரைவாகவும் சரியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஜனநாயகச் சூழலை சீர்குலைப்பதற்காக எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் ஒருசூழ்ச்சித்திட்டமே கிறீஸ் மனிதர்கள் என்றும் இதை அரசுதான் செய்து வருவதாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் பொறுப்புள்ள அரசாங்கமாகிய நாம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்ததுடன் இந்நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ள நிலையில் விரைவில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.
அமெரிக்கா மற்றும் வியட்னாம் போன்ற வெளிநாடுகளில் பல்வேறு இடர்பாடுகளின் மத்தியில் மீள்குடியேற்றம் நீண்டகாலமாக நீடிக்கப்பட்ட போதிலும் எமது நாட்டில் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அரச அதிபர் தலைமையிலான அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொது நிறுவனங்களினது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் முக்கியமானதாக இருந்துள்ளது எனவும் இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்களிப்பு இன்றியமையததாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரைகளை ஆளுநர் சந்திரசிறி அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உரையாற்றியதைத் தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முன்பதாக யாழ்.நூலகத்திற்கு வருகைதந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்ததை தொடர்ந்து மங்களவிளக்கை விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.
இதில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர்கள் யாழ்.மாநகர உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள் திட்டப்பணிப்பாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment