Friday, August 26, 2011

எம்.பி.,க்கள் குழு விரைவில் இலங்கை பயணம் : ராஜ்யசபாவில் அமைச்சர் கிருஷ்ணா தகவல்!

Friday, August 26, 2011
புதுடில்லி : ""தமிழக முதல்வர் குறித்து, இலங்கை பாதுகாப்பு செயலர் கூறிய கருத்துக்களை, இந்தியா நிராகரிக்கிறது. இலங்கை நட்பு நாடு என்பதால், தமிழர் பிரச்னையில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் குழு ஒன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதாவது: இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்று இலங்கை. அந்நாட்டுக்கு நான் ஐந்து நாள் பயணமாக சென்ற போது, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்னுடனேயே இருந்தார். நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே, என்னை அழைத்துச் சென்றார். அந்தளவுக்கு அன்பு காட்டினர்.

அப்போது குறுக்கிட்ட தி.மு.க., எம்.பி., சிவா, ""தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு உங்களை அழைத்துச் சென்றார்களா,'' என்று கேட்டார். அதற்கு இல்லை என்று பதிலளித்த அமைச்சர் கிருஷ்ணா மேலும் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக இனப் பிரச்னை உள்ளது. இதில், அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் என, அனைவரது விஷயத்திலும் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

இந்தியா, ரூ.500 கோடி அளித்தது; நிறைய உதவிப்பொருட்களும் அளித்தது. 50 ஆயிரம் வீடுகளை கட்டுவது என்பது பெரிய காரியம். எனவேதான் தாமதம் நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் கூடாது என, போரின் போது, திரும்ப திரும்ப இந்தியா கூறியே வந்தது. தமிழக முதல்வர் குறித்து, அந்நாட்டு பாதுகாப்பு செயலர் கூறிய கருத்துக்களை இந்தியா நிராகரிக்கிறது.

இங்கு கூறப்பட்ட யோசனைகளின்படி, அனைத்துக்கட்சி எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு மட்டங்களில் அமைதிக் குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் யாருமே இலங்கை சிறைகளில் இல்லை. இலங்கை மீனவர்கள் நிறைய பேர், இந்திய சிறையில் உள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட தமிழக எம்.பி.,க்கள் சிலர், "இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையை சொல்லுங்கள்' என்றனர். அதற்கு, 2008ல் 5 பேரும், 2010ல் ஒருவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். அதற்கு சிலர் கடுமையான எதிர் கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும், கிருஷ்ணா தொடர்ந்து பேசியதாவது:

இங்குள்ள உறுப்பினர்களின் உணர்வுகளை இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துக் கூறுவேன். தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை சற்று தொய்வடைந்துள்ளது.

அதை மேலும் வலுவடையச் செய்ய இந்தியா பாடுபடும். அந்நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படாதவகையில், தமிழர் உள்ளிட்ட அனைவரும் ஏற்கக் கூடிய வகையில் அரசியல் தீர்வையே இந்தியா விரும்புகிறது. அதை அடையச் செய்ய இந்தியா துணை நிற்கும். இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

கிருஷ்ணா பேசியவுடன் அவரின் பதிலுரை திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, இந்திய கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கட்சிகளின் எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment