Thursday, August 25, 2011

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ள யாழ். மக்கள்!

Thursday, August 25, 2011
மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஆங்காங்கே நடைபெற்றுவருவதால் யாழ். குடாநாட்டு மக்கள் பயப் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் போல் வடமராட்சி மற்றும் கொக்குவில், மல்லாகம் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இரவில் நடமாடுவதைத் தவிர்த்து வருகின்றனர். கொக்குவில் கிழக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் வெள்ளை வாகனத்தில் வந்தியங்கிய நான்கைந்து பேர் அவ்வீதியூடாக அச்சமூட்டும் வகையில் நடமாடித்திரிந்துள்ளனர். இதனை அவதானித்த மக்கள் ஒன்றிணைந்து அவர்களைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றபோது அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள காந்திஜி சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக நிலையத்தினர் ஆயந்த வேலைகயில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சனசமூக நிலையத்தில் வழைக் குலைகள் கட்டப்பட்டிருந்தன. மர்ம மனிதர்கள் வாழைக்குலைகளை பிடுங்கி அதனை துண்டு துண்டுகளாக வெட்டி வீதியில் எறிந்து மக்களை அச்சமூட்டும் வகையில் நடந்துள்ளனர். பின்னர் 3 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மர்மமனிதர்கள் வீடு ஒன்றினுள் உள்நுழைய முற்பட்டுள்ளனர். வீட்டார் கூச்சலிட்டதையடுத்து மர்ம மனிதர்கள் மரங்களிலிருந்து இறங்கி ஓடியுள்ளனர்.

இதேபோல் மல்லாகம் நீதவான் முகாம் கோணாப்புலம் முகாம் பகுதிகளில் மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கண்ணுற்ற பொது மக்கள் அவர்களைப் பிடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு ஏமாற்றமடைந்தனர். பின்னர் அப்பகுதி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நாவாந்துறைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. மக்கள் அச்சத்துடனேயே தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாவாந்துறையில் பொலிஸாரினாலும் இராணுவத்தினாலும்பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கிணங்கள தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உறவினர்கள் நாவாந்துறையில் தொடரும் அச்ச நிலையால் இரவில் புனித பரலோகமாதா ஆலயத்திலும் சென் நீக்கிலஸ் தேவாலயத்திலும் தங்கி வருவதாக அப்பகுதி பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment