Saturday, August 27, 2011

இலங்கையுடனான உறவை எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை:போர்க்குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும்-கிருஷ்ணா!

Saturday, August 27, 2011
இலங்கையுடனான உறவை, எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள, இந்தியா தயாராக இல்லை. கச்சத்தீவு முடிந்து போன விஷயம். திரும்பவும் பேச முடியாது. போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்தும். ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் வரும்போது, அதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து, பிறகு முடிவு செய்யப்படும்' என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் விவகாரம், பார்லிமென்டில் நேற்று முன்தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டு அவைகளிலுமே, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பாலும், இதுகுறித்து தமிழக எம்.பி.,க்கள் மட்டுமே பேசிவந்த நிலையில், இம்முறை வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சிகளுமே இந்த விவாதத்தில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை நேற்று பதிவு செய்தன.

தனது பதிலுரையின் போது, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: இலங்கை இந்தியாவின் அண்டைநாடு என்பதோடு மட்டுமல்லாது, நட்புறவுடன் கொண்ட நாடு. அந்த நாட்டுடனான உறவை, எந்தக் காரணத்திற்காகவும் கெடுத்துக் கொள்வதற்கு, இந்தியா தயாராக இல்லை. மாறாக, இலங்கையுடனான இந்தியாவின் உறவை, மென்மேலும் பலப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறோம்.கச்சத்தீவு விவகாரம் என்பது, முடிந்து போன ஒன்று. சர்வதேச ஒப்பந்தம் மூ லம், அதை இலங்கைக்கு அளித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் பரிசீலிக்க இயலாது.

இலங்கையில், தற்போது நடந்து முடிந்த போரின் போது அத்துமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. போர்க்குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது. அந்த விசாரணை, நியாயமாக இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. போர் குற்றங்களுக்காக, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், இந்தியாவின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. முதலில் அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரட்டும். அப்போது, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்பதே இந்தியாவின் நிலை. தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு, இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கிடும். இதில், இந்தியா ஆர்வமாக உள்ளது. இவ்வாறு, கிருஷ்ணா பேசினார்.

அமைச்சரின் பதிலுரையின்போது குறுக்கிட்ட திமுக எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "இலங்கையில் போருக்குப் பிறகு புலிகள் அமைப்பு முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தீர்வு தேவையில்லை என, கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார்.

அதுகுறித்த இந்தியாவின் கருத்து என்ன? 1983ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அத்துமீறல்கள், கொலைகள், கற்பழிப்புகள், சூறையாடுதல் என நிறைய வன்முறைகள் நடந்துள்ளன. அதுகுறித்து, சர்வதேச அளவிலான விசாரணை அமைப்பு நிறுவி, அதன்மூலம் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து, இந்தியாவின் நிலை என்ன?' என்று பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலாக கிருஷ்ணா," நான் இந்திய அரசின் கருத்துக்களை மட்டுமே கூற முடியும். அதைத் தாண்டி எதையும் கூறிவிட முடியாது' என்று பதில் அளித்தார்.

அமைச்சரின் பதிலைக் கேட்டவுடன், திமுக எம்.பி.,க்கள் தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். திமுக வெளிநடப்பு அறிவிப்பு சொன்ன மறுகணமே, நொடி கூட இடைவேளை அளிக்காமல், உடனடியாக அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதனால், அ.தி.மு.க.,வுக்கு கால அவகாச வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையே பின்னர் நிருபர்களைச் சந்தித்தபோதும், அதிமுக எம்.பி.,யான தம்பிதுரை தெரிவித்தார்.
மீண்டும் அவை கூடியபோது, அதிமுக எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் இறங்கினர். ஆனால், அந்த சமயத்தில் லோக்பால் விவகாரம் பெரிய அளவில் அவையில் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

அரசு அக்கறையில்லை : சரத்யாதவ் பேசும்போது," இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை, முற்றிலும் தோற்றுவிட்டது. எனவே, அதை மாற்ற வேண்டும். வங்கதேசத்தை உருவாக்கிய இந்தியா, இலங்கை விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதற்கு கிருஷ்ணா," அப்போதைய சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு,' என்றார். மேலும், மீனவர் பிரச்னைக்கு ஒரே தீர்வு, கடல் எல்லையை மீனவர்கள் மதித்து நடக்க வேண்டும்'என்றார்.

No comments:

Post a Comment