Friday, August 26, 2011

4ஆம் இணைப்பு:-ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை?.

Friday, August 26, 2011
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நகல், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கிடைத்துள்ளது. அது, உள்துறை செயலாளர் மூலம் சிறைத்துறைக்கு அனுப்பப்படும். சிறை அதிகாரிக்கு உத்தரவு நகல் கிடைத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பதால் வேலூர் சிறை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்னர் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். தூக்கு தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர். ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருக்கிறார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மூவரின் கருணை மனுக்களை சமீபத்தில் ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் 3 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தூக்கு தண்டனைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான ஜனாதிபதி உத்தரவின் நகல், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கு நேற்று கிடைத்துள்ளது. அவர், அதை உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவுக்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த நகல் சிறைத்துறை கூடுதல் டிஜிபி டோக்ராவுக்கு இன்று அனுப்பப்படும் என்று தெரிகிறது.

அவர், உடனடியாக வேலூர் சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பிக்கு அனுப்புவார் என்று கூறப்படுகிறது. சிறை கண்காணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவின் நகல் கிடைத்த 7 நாளில் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதில் 5 அரசு வேலை நாட்கள் இருக்க வேண்டும் என்பது விதி. தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாளை நிர்ணயிப்பது சிறை கண்காணிப்பாளரின் முடிவை பொறுத்தது. தூக்கு தண்டனை நிறைவேற்றும் நாளை குறிப்பிட்டு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய கோர்ட்டுக்கு சிறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு தண்டனையை நிறைவேற்றுவார்.
வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு இன்றைக்குள் உத்தரவு போய் சேர்ந்துவிடும் என கூறப்படுகிறது.

அதனால் இன்றில் இருந்து 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் சிறை நிர்வாகம் ரகசியமாக செய்து வருகிறது. இதுகுறித்து வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பியிடம் கேட்டபோது, ‘‘இன்று காலை வரை உள்துறை அமைச்சகத்தின் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அரசு உத்தரவு வந்தால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, வேலூர் சிறை முன்பு இன்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சிறையை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.க்கள் உள்பட 50-க்கும் அதிகமான போலீசார் சிறையை சுற்றிலும் ரோந்து செல்கின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்று வேலூர் எஸ்.பி. பாபு கூறினார்.

No comments:

Post a Comment