


Friday, August 26, 2011
புதுடெல்லி : அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு, எனது மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஜய் கூறினார்.
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க, நடிகர் விஜய் நேற்று காலை டெல்லி சென்றார்.
அங்கு அன்னா ஹசாரேவை வாழ்த்திவிட்டு கூட்டத்தில் அவர் பேசியதாவது: 75 வயதிலும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பது அவரது மனோதிடத்தை காட்டுகிறது. இந்த நாட்டுக்காக, மக்கள் நலனுக்காக அவர் மனஉறுதியுடன் செய்துவரும் இந்த அறவழிப் போராட்டம் அவருடைய தேசப்பக்தியை உலகுக்கு உணர்த்துகிறது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள் இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்கிறார்கள். தமிழன் என்ற முறையில் அன்னா ஹசாரேவை நேரில் வாழ்த்த விரும்பினேன். அந்த வகையில் இங்கு நான் கலந்து கொண்டதை பெருமையாக நினைக்கிறேன். அவரது இந்தப் போராட்டத்துக்கு என் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு விஜய் பேசினார். விஜய்யின் மேலாளர் எம்.ராமு, டெல்லி நற்பணி மன்றத் தலைவர் கே.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment