Friday, August 26, 2011

புதுடில்லி பார்லிமென்டில் விவாதம்:இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை!

Friday, August 26, 2011
புதுடில்லி : பல நாட்களாக நிலுவையில் இருந்த, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, ஒரு வழியாக லோக்சபாவில் நேற்று விவாதிக்கப்பட்டது. "இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு இனப் படுகொலை செய்தவர்கள் மீது, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தவிர, பிற கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழக எம்.பி.,க்கள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் தள்ளிக் கொண்டே போன அந்த விவாதம், நேற்று நடைபெற்றது.




விவாதத்தை துவக்கி வைத்து தி.மு.க., தரப்பில் டி.ஆர்.பாலு பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கை தயார் செய்துள்ளது. நடுநிலையானவர்களால் தயாரிக்கப்பட்டது அந்த அறிக்கை. அதன்படி பார்த்தால், இலங்கையில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வரை போரில் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மருத்துவமனைகள் மீது கூட குண்டுகள் வீசப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் என, இரக்கம் பார்க்காமல் கொல்லப்பட்டுள்ளனர். போர் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன. போரின் போது, சர்வதேச மீடியாக்கள் யாரையும் உள்ளே நுழைய விடவில்லை. 1983லிருந்து 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற போர்க் குற்றங்கள் அனைத்தையுமே விசாரிக்க வேண்டும். தமிழ் மொழி, தமிழர்கள் என, அனைத்தையுமே இலங்கை அரசாங்கம் இழிவுபடுத்துகிறது. இலங்கையில் நடக்கும் போராட்டம் தீவிரவாத போராட்டம் அல்ல. சிறுபான்மை மக்கள் தங்களது உரிமைகளுக்காக நடத்தும் போராட்டம். தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர வேண்டுமென்று பலமுறை இந்தியாவிடம் கேட்டு விட்டோம். எதுவும் நடவடிக்கை எடுத்தது போலத் தெரியவில்லை. இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

பாலு பேசிக் கொண்டிருந்தபோது பல முறை இடைமறித்த சபாநாயகர், "இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அந்நாடு குறித்து அதிகமாக தாக்கிப் பேச வேண்டாம்' என, கேட்டுக் கொண்டே இருந்தார்.

பின்னர் அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை பேசியதாவது: இந்தியாவை இலங்கை பிளாக்மெயில் செய்து கொண்டே இருக்கிறது. இந்தியாவும் அதற்கு பயந்துபடியே உள்ளது. இந்த பயத்திற்கான காரணம் என்ன என்பது புரியவில்லை. இலங்கைக்கு உதவி செய்வதற்கு சீனாவை காரணம் காட்டுகிறது இந்தியா. எவ்வளவு உதவிகளை இந்தியா செய்து கொண்டே இருந்தாலும், சீனாவுக்குத் தான் எப்போதும் இலங்கை ஆதரவாக இருக்கும். தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை கேலி செய்துள்ளார் இலங்கை பாதுகாப்பு செயலர். அதை இந்தியா கண்டிக்காதது ஏன்? இவ்வாறு தம்பிதுரை பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி எம்.பி.,யான லிங்கம் பேசுகையில், ""இலங்கையின் போர் வெற்றிக்கு காரணமே இந்தியா. இந்தியா அளித்த ஆயுதங்களை வைத்து தான், இலங்கை வெற்றி கண்டது. இதை ராஜபக்ஷே வெளிப்படையாகக் கூறியுள்ளார். இலங்கை செய்த போர்க் குற்றங்களை பட்டியலிட்டு, அந்நாட்டின் மீது வழக்கு தொடர, 41 நாடுகள் கூட்டாக ஒன்றிணைந்துள்ளன. அதற்கு இந்தியா ஏன் ஆதரவு அளிக்க இன்னும் முன்வரவில்லை,'' என்றார்.

கோவை எம்.பி., நடராஜன் பேசும்போது, ""வடக்கு கிழக்கு மாகாணங்களில் ராணுவ முகாம்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை ஏன் வாபஸ் பெறவில்லை. தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அந்நாட்டு பாதுகாப்பு செயலர் கேலியும் கிண்டலும் செய்கிறார். இதற்கு அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கண்டித்திருக்க வேண்டாமா,'' என்றார்.

கணேசமூர்த்தி பேசும்போது, இப்போதெல்லாம் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் புகுவதாகவும் கூறப்படுகிறது. அங்கு தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
விவாதத்தின் மீது எம்.பி.,க்கள் பேசி முடித்ததும், அரசு தரப்பில் பதில் சொல்வதற்காக வெளியுறவு இணையமைச்சர் அகமது எழுந்தார். மிக முக்கியமான விஷயத்திற்கு, கேபினட் அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டுமென்று எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இணையமைச்சர் பதில் அளிக்கலாம் என சபாநாயகர் கூறினாலும், எம்.பி.,க்கள் சமாதானம் அடையவில்லை. இந்தக் குழப்பம் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. இறுதியில், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான விவாதத்துக்கு அரசு தரப்பில், நாளை(இன்று) லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பதில் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

பிக்னிக் டூர் : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், ஏதோ பிக்னிக் போவது போல, இலங்கைக்கு எம்.பி.,.க்கள் சென்று வந்தனர். அவர்கள் அளித்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் நிலை ஆஹா, ஓஹோ என, இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி பெண் நிருபர், இலங்கை சென்று வந்து அளித்த அறிக்கையில், நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளதாக கூறியதன் மூலம், உண்மை அம்பலமாகியுள்ளது. வெறும் பிக்னிக் டூர் அல்ல. பரிசுப் பொருட்களும் வாங்கி வந்த டூர் அது.

தமிழர்களுக்கு துரோகம் செய்த மத்திய அரசு : இலங்கை தமிழர் பிரச்னை குறித்து நேற்று ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் பேசியதாவது: சிவா - தி.மு.க: இலங்கையில் தமிழ்பகுதிகளில் ஆண்களே இல்லாத நிலைமை உள்ளது. பார்லிமென்ட் குழுவை இலங்கைக்கு அனுப்பி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும்

மைத்ரேயன் - அ.தி.மு.க: போர்க்குற்றம் செய்த ராஜபக்ஷே, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குள்கூட நுழைய முடியவில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தீர்மானத்தையும், முதல்வரையும் இழிவாக கோத்தபய பேசினார். இதற்கும், இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை.

அலுவாலியா - பா.ஜ: இலங்கையில் உள்ள சூழ்நிலையை உண்மையில் கண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பார்லிமென்ட் குழு ஒன்றை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுதர்சன நாச்சியப்பன் - காங் : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இலங்கைக்கு குழு அனுப்பப்பட்டது. அந்த குழு சென்று திரும்பி வந்த, 15 நாட்களுக்குள், 1.5 லட்சம் பேர் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இலங்கையில் தற்போதுதான் அமைதி திரும்பியுள்ளது.

ராஜா - இ.கம்யூ: இலங்கை தமிழர்களுக்கு மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துரோகம் செய்து விட்டது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என, மத்திய அரசு கேட்காதது ஏன். கடந்த 2009ல், தமிழர் கொல்லப்பட்டுள்ளனர். அது இனப்படுகொலையே அன்றி, வேறில்லை.

ரங்கராஜன் - மா.கம்யூ: இலங்கையில் போரின்போது ஏராளமான குற்றங்கள் நடைபெற்றன.. இந்த குற்றங்கள் குறித்து, சுதந்திரமாக செயல்படும் ஒரு விசாரணை கமிஷனை அமைத்து விசாரிக்க, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment