Sunday, August 28, 2011

போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

Sunday, August 28, 2011
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16-ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டு அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு அலை உருவானதையடுத்து மத்திய அரசு அன்னாஹசாரே குழுவினருடன் பேச்சு நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

அடுத்தக்கட்டமாக மத்திய மந்திரி விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அரசுக்கும், அன்னாஹசாரே குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அன்னாஹசாரே 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அன்னா ஹசாரே கோரிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழுவினருடனும் மத்திய மந்திரிகளுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அன்னாஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதற்கான உறுதி மொழி கடிதம் அன்னா ஹசாரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரும் அன்னாஹசாரேயின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து அன்னாஹசாரே நேற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கோரிக்கைகளை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று அன்னாஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் 12-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இது மத்திய அரசுக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திலும், மேல்- சபையிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச்சு நடத்தினார். பாராளுமன்றத்தில் அன்னா ஹசாரேயின் 3 கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட சம்மதம் தெரிவித்தார். நேற்று மாலை இந்த தகவல் பரவியதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்கு பின் நேற்று இரவு 8 மணிக்கு ஹசாரேயின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்கும் தீர்மானத்தை நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கொண்டு வந்தார்.

ஆளும் கட்சியான காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. எம்.பி.க்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. டெல்லி மேல்- சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் ஆகியோர் அன்னா ஹசாரேயை நேற்று இரவு சந்தித்து பாராளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தின் நகலையும், பிரதமரின் கடிதத்தையும் அவரிடம் கொடுத்தனர்.

அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-

உங்கள் அனைவரது அனுமதியுடன் எனது உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது ஜன்லோக்பாலுக்கு கிடைத்த பாதி வெற்றிதான். முழு வெற்றியை கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். எனது 3 கோரிக்கைகளை ஏற்று தீர்மானத்தை நிறை வேற்றிய எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

இதை கேட்டதும் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் விண்ணை முட்டும் வண்ணம் கரகோஷமும், வாழ்த்து கோஷமும் எழுப்பி னார்கள். தேசிய கொடியை அசைத்தவாறு மைதானம் முழுவதும் கொண்டாடி னார்கள். இதேபோல் நாடு முழு வதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியதும் உடனடியாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட அவர் விரும்பவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டார். இதையட்டி இன்று காலை முதலே ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மேடையில் அன்னா ஹசாரே காந்தி குல்லா அணிந்து இருந்தார்.

அவரை சுற்றிலும் காந்திகுல்லா அணிந்த சிறுவர்- சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். முதலில் அரவிந்த் கெக்ரிவால் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அன்னா ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மத்திய அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தலித்- முஸ்லிம் சிறுமிகள் அதன்பிறகு டெல்லியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 வயது தலித் சிறுமி சிம்ரன், முஸ்லிம் சிறுமி இக்ரா ஆகியோர் அன்னாஹசாரேக்கு தேன் கலந்த இளநீர் கொடுத்தனர்.

அதை வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அப்போது அன்னா ஹசாரே வாழ்க என்று கோஷமிட்டனர். தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது. அதை அன்னாஹசாரே கைதட்டி ரசித்தார். ஆதரவாளர்கள் மத்தியில் அன்னாஹசாரே நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதந்தா மெடிசிட்டி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. அவரதுஉடல் உறுப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பரிசோதனை செய்யப்பட்டது. 12 நாளில் அவரது உடல் எடை 7 கிலோ குறைந்து 64 கிலோவாக இருக்கிறது.

சில நாட்கள் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்புவார் என்று அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அன்னாஹசாரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான சித்தி கிராமத்திலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். மும்பை, பெங்களூர், ஆமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment