Wednesday, August 24, 2011
மர்ம மனிதன் தொடர்பில் ஏற்பட்ட சம்பவங்கள் முழுக்க முழுக்க வதந்தியல்ல, சில உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (24.8.2011) இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மர்ம மனிதன் தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடாச்சியாக இடம்பெற்றுவருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஒரு பொறுப்புமிக்க அரசியல் கட்சியென்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான இம் மர்ம மனிதன் தொடர்பான அச்சமான சூழ் நிலை மக்களை குழப்பத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.
இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமான உறவும் சீர்குலைந்துள்ளது.
இதனால் சில பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.
இம் மர்ம மனிதர்கள் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஓதுக்க முடியாதபடி சில உண்மைச்சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இம் மர்ம மனிதர் எனப்படுபவரால் சில பொண்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இம் மர்ம மனிதர் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கி விடமுடியாது
ஆனால் சிலரின் திட்டமிட்ட வகையில் மக்களை குழப்பத்திலும் அச்ச உணர்விலும் ஆழ்த்துகின்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதையும் நிராகரிக்க முடியாது.
இன்று கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையை முற்றாக சீர்குலைக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற இம் மர்ம மனிதன் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடாத்தி அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு தரப்பினரது முக்கியமான கடமையாகும்.
இக்காலப்பகுதியானது முஸ்லிம் மக்களின் நோன்பு காலமாகவும், மற்றும் தமிழ் கிறிஸ்த்தவ மக்களின் திருவிழாக்கள் காலமாகவும், மாணவர்களின் பரீட்சைக்காலமாகவும் இருப்பதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இன்றியமையாததாகும்.
நான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் மக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பு, மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடி ஆராய்ந்து வருகின்றேன்.
கடந்த முப்பது வருட யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டும் காப்பாற்றிக்கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ் நிலையில் மீண்டும் ஒரு அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அனுமதிக்காது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment