Wednesday, August 24, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை அரசு கருத்தில் கொள்ளாது 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்-டியூ. குணசேகர!

Wednesday, August 24, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை அரசு கருத்தில் கொள்ளாது, 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான டியூ. குணசேகர தெரிவித்தார்.

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான சோஷலிச மக்கள் முன்னணியின் கருத்தை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:

வீதிகள் மற்றும் மதகுகளை அமைப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது எனவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்வைக்கும் யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்துள்ளது. எனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டியதில்லை என சமூகத்தில் சில கருத்துகள் பரவியுள்ளன. இது ஒரு பயங்கரமான கருத்தாகும். அத்துடன், பொருளாதார அபிவிருத்தியே இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற கருத்தும் நிலவுகிறது. இதுவும் தவறானது.

அபிவிருத்தியால் மட்டும் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதுமானதல்ல.

வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தெரிவுக்குழு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மீண்டும் ஒரு யுத்தம், பிரிவினைவாதம் வராமலிருக்க இந்த 21 கட்சிகளும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும்.

30 வருடகாலமாக பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான தீர்வை நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக அரசாங்கம் முன் வைக்கும். அத்துடன் அவர்கள் மீண்டெழ நாம் அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும்.

அதேபோன்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் பல்வேறு சவால்கள் உள்ளன. அதனால் நாம் இராஜதந்திர ரீதீயிலும், தந்திரோபாய வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை இந்திய தமிழர் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு தமிழ்நாட்டில் சுமார் 65 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. எனவே, இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

யுத்தத்தின்போது மௌனமாக இருந்து இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கியது. இந்தியாவின் ஒத்துழைப்பு இருந்திரா விட்டால், யுத்தத்தை நாம் வென்றிருக்க முடியாது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். ஆனால், இந்தியாவுடன் நல்ல தொடர்பை பேணி வரவேண்டும்.

தெரிவுக்குழு விடயம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஊடகங்களின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு குணசேகர தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அமைச்சர் டியூ குணசேகரவும் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment