Saturday, August 27, 2011

குடாநாட்டில் மர்ம மனிதர்களின் தாக்குதலில்:கோண்டாவிலைச் சேர்ந்த ரி. தர்மகுலசிங்கம் (வயது 54) குடும்பஸ்தர் படுகாயம்!

Saturday, August 27, 2011
யாழ். குடாநாட்டில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் மர்ம மனிதர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இராமகிருஷ்ண வீதி, கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலைச் சேர்ந்த ரி. தர்மகுலசிங்கம் (வயது 54) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவிற்காக தனது மனைவி பிள்ளைகளுடன் ஊருக்கு வந்திருந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் மலசலகூடத்திற்குச் சென்றபோது அதற்குள் மறைந்திருந்த கறுப்பு உடையணிந்த மூன்று மர்ம மனிதர்கள் அவரைத் தாக்கிவிட்டு கண்களைக்கட்டி துணியொன்றில் அவரைக் கட்டி தோட்டக் காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று கையில் பொருத்தியிருந்த கூரிய ஆயுதங்களால் நெஞ்சு மற்றும் முதுகுப் புறங்களில் சரமாரியாகத் தாக்கிக் கீறியுள்ளனர்.

அவர் வலி தாங்காது சத்தமிட்டதையடுத்து அந்த மர்ம நபர்கள் அப்பகுதியிலிருந்து ஓடித் தலைமறைவாகியுள்ளனர். குடும்பஸ்தரின் கூக்குரலைக் கேட்ட அயலவர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் அவரை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது குறித்த குடும்பஸ்தர் போதனா வைத்தியசாலையில் 24 ஆவது சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதேவேளை திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தினால் தமது அன்றாடப் பணிகளைச் செய்யமுடியாது முடங்கியுள்ளனர்.

நேற்றும் நேற்று முன்தினமும் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற மர்ம மனிதர்கள் வீடுகளுக்கு மேல் நடமாடித் திரிந்ததுடன் வீட்டின் ஓடுகளைப் பிரித்து உள்நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

நான்கு ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் இவர்கள் உயரமானவர்களாகவும் கறுத்த உடையணிந்தவர்களாகவும் காணப்பட்டதுடன் காலில் அணிந்துள்ள சப்பாத்துக்களில் ஸ்பிரிங் போன்ற கருவியைப் பொருத்தியுள்ளதை அவதானித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியிலுள்ள வீட்டுக்குள் சென்ற மர்ம மனிதர்கள் அவர்களை அச்சுறுத்தி கதவுகளை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கத்திக் கூச்சலிடவே அம்முயற்சியைக் கைவிட்டு அப்பகுதியை விட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறாக மூன்று வீடுகளில் இச் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து அப் பகுதியிலுள்ளவர்கள் ஒன்றுகூடி துரத்திச் செல்கையில் அப் பகுதிக்கு இராணுவத்தினர் வந்து அவர்களைத் துரத்தவேண்டாமென வற்புறுத்தியதுடன் அனைவரையும் வீதிகளில் நிற்காது வீடுகளுக்குள் செல்லுமாறும் தெரிவித்து தடியடிப் பிரயோகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை மர்ம மனிதர்கள் இராணுவம் நின்ற பகுதிக்குள் சென்ற சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மர்ம மனிதர்களும் இராணுவத்தினரும் ஒரே நேரத்தில் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இப் பகுதியில் உள்ள வீதி மின்விளக்குகளை இராணுவத்தினர் உடைத்துச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரிவிக்கையில் மர்ம மனிதர்கள் போன்று வருபவர்கள் திருடர்கள் எனவும் அவர்கள் உங்களிடம்தான் வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் அவர்களைப் பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்ற போது இராணுவத்தினர் அவர்களைப் பிடிக்கவேண்டாமென தடை ஏற்படுத்துகின்றார்கள். இத்தகைய சம்பவங்களால் அப்பகுதிகளில் அச்ச நிலைமை தொடர்ந்த வண்ணமுள்ளது.

No comments:

Post a Comment