Saturday, August 27, 2011

5ஆம் இணைப்பு:-முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்-வேலூர் சிறை கண்காணிப்பாளர்!

Saturday, August 27, 2011
வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் 9ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று வேலூர் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது, மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தும் 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். தூக்கு தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர். ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருக்கிறார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தனர்.

அதன் மீது 2005ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மத்திய அரசின் கருத்தை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது. மீண்டும் அது மறுபரிசீலனைக்காக இந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி உள்துறை அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டது. மார்ச் 8ம் தேதி உள்துறை தனது கருத்தை மீண்டும் பதிவு செய்தது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மூவரின் கருணை மனுக்களை சமீபத்தில் ஜனாதிபதி நிராகரித்தார். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான ஜனாதிபதி உத்தரவின் நகல், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கு நேற்றுமுன்தினம் கிடைத்தது. அவர், அதை உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவுக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து அந்த நகல் சிறைத்துறை கூடுதல் டிஜிபி டோக்ராவுக்கு நேற்று அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜன், வேலூர் மத்திய சிறைக்கு வந்தார்.

ஜனாதிபதி உத்தரவின் நகல் கிடைத்ததை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் சிறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. பின்னர் இதுகுறித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறியதாவது: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதியின் உத்தரவு நகல் சிறைத்துறை டிஐஜி நேரடியாக வேலூர் மத்திய சிறைக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

கருணைமனு நிராகரிக்கப்பட்ட தகவல் 3 பேருக்கும் தெரிவிக்கப்பட்டு, நகலும் அளிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 7 வேலைநாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி ஆகிய விடுமுறை நாட்களை கழித்தால் 8ம் தேதி வரை 7 அரசு வேலைநாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அவகாசம் முடிந்த பிறகு வருகிற 9ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் குவிப்பு: கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவல் தமிழக அரசுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று காலை வேலூர் சிறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சிறையை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.க்கள் உள்பட 50க்கும் அதிகமான போலீசார் சிறையை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையைச் சுற்றியுள்ள பாகாயம் சாலை, அரியூர் சாலை, சித்தேரி சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு ஒரு இடத்தில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை பிரதான வாயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி சேஷசாயி, எஸ்.பி. பாபு ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சிறை கண்காணிப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர். எஸ்.பி. பாபு கூறும்போது, ‘தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்Õ என்றார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு...

தமிழகத்தில் கடைசியாக சேலம் சிறையில் கடந்த 1995ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சென்னையைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு கடந்த 1983ம் ஆண்டு வேலூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதன் பிறகு கடந்த 28 ஆண்டாக வேலூர் சிறை தூக்குமேடையில் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு அரசு கருணை காட்டுமா? செப்டம்பர் 9ம் தேதி சூரிய உதயத்தை பார்க்க முடியுமா? என்ற ஏக்கத்தோடு சிறையின் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள தூக்கு மேடையை தயார்படுத்தும் பணியை சிறைத்துறை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment