Monday, August 29, 2011

24 மணி நேர கண்காணிப்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் : வேலூர் மத்திய சிறையில்!

Monday, August 29, 2011
வேலூர் : வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 24 மணி நேரமும் சிறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு வருகிற 9ம் தேதி அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வேலூர் சிறையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நாளுக்கு நாள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சிறை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதான வாயிலில் ஆயுதப்படை போலீசாரும், சிறையைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ளூர் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். சிறை வழியாகச் செல்லும் வாகனங்கள் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுகின்றன. சிறையில் உள்ள கைதிகளை பார்க்க செல்லும் உறவினர்களும் வீடியோ, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றனர். நேற்று கூடுதலாக ‘டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்‘ கருவியும் பொருத்தப்பட்டது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மற்ற கைதிகளுடன் பேசவும், நூலகத்துக்கு சென்று படிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை அந்த அறையிலேயே வழங்கப்படுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள தூக்குமேடையை தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. தூக்குமேடை மற்றும் கயிற்றின் தாங்கும் திறன் போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது 8 தூக்கு கயிறுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘ஹேங் மேன்’ பணியில் வேலூர் சிறையில் யாரும் இல்லை. எனவே சிறைக்காவலர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் வேலூர் சிறை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 24 மணி நேரமும் சிறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் உடல்நிலையை அதிகாரிகளின் முன்னிலையில் தினமும் சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனை விவரங்களை சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment