Sunday, August 21, 2011
மாட்ரிட்: ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் கிறிஸ்தவ பள்ளியில் கடந்த 84 ஆண்டுகளாக கன்னியாஸ்திரியாக இருப்பவர் தெரெசிடா (103). இங்கு வந்தது முதல் இதுவரை அவர் பள்ளியை விட்டு வெளியில் எங்குமே செல்லவில்லையாம். இப்போது முதல்முறையாக தனது 103வது வயதில் போப்பை சந்திக்க உள்ளார் தெரசிடா.
போப்புக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஆம்... தற்போதைய போப் 16ம் பெனடிக்ட், 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். அதே நாளில்தான் தெரெசிடா தனது 19வது வயதில் மாட்ரிட் கிறிஸ்தவ பள்ளியில் மக்கள் சேவைக்காக தன்னை இணைத்து கொண்டார்.
தெரசிடா கூறியதாவது: சேவை செய்வதே என் பணி என்று நினைத்து கடந்த 84 ஆண்டுகளாக கடமையாற்றி வருகிறேன். எனக்கு 103 வயது ஆகிறது. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். இந்தப் பள்ளியில் நான் சேர்ந்த அதே நாளில்தான் போப் பிறந்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. தற்போது அவரை சந்திக்க இருப்பது, எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன்.
கடந்த 84 ஆண்டுகளாக இப்பள்ளி என்னை அரவணைத்து காப்பாற்றியது. போப்பை சந்திக்கும் வாய்ப்பையும் இப்போது ஏற்படுத்தி தந்துள்ளது. இதற்காக பள்ளிக்கு நன்றி கூற விழைகிறேன்.
1936 1939ம் ஆண்டுகளில் இங்கு மிகப்பெரிய அளவில் உள்நாட்டு போர் நடந்தது. உயிரை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தப்பி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தோம். சிறிது காலம் வெளியிடங்களில் தனித்து இருந்த நாங்கள், இயல்பு நிலை திரும்பியதும் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். அதன்பிறகு இன்று வரை நான் எங்கும் வெளியில் சென்றதே இல்லை. போப்பை விரைவில் சந்திக்க இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. என் நினைவுகள் சிதறாமல் இருக்க, கண்களை மூடியபடியே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினார் தெரசிடா.
No comments:
Post a Comment