Thursday, July 14, 2011

இலங்கைப் பிரச்சினைகளை விற்று அரசியல் நடத்தும் இந்திய தலைவர்கள்-ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர்!

Thursday, July 14, 2011
இலங்கைப் பிரச்சினைகளை விற்று அரசியல் நடத்தும் இந்திய தலைவர்கள்-ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர்!

ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கோஷமிடும் இந்திய அரசியல் தலைவர்கள், தற்போது இலங்கைப் பிரச்சினைகளை விற்று அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாக ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் பிரதமருக்கு நிகரானவர் அவருக்கு தற்போதே ஞானம் பிறந்திருக்கின்றது. நாடு தொடர்பிலான அவரது தற்கால அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வவுனியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சாந்த புஞ்சிஹேவகே மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; அண்மையில் நான் தமிழகம் காயல் பட்டினத்திற்கு சென்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசுகையில் ஈழம் மலர்வது வெகு தொலைவில் இல்லையெனத் தெரிவித்தனர். அங்கு தேர்தல் முடிந்த பின்னரும் கூட இவ்வாறு ஒரு எண்ணம் கொண்டு பேசுகின்றனர்.

உண்மையில் இந்திய அரசியல் தலைவர்கள் இலங்கையை விற்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். வடக்கு இன்று பாரிய அபிவிருத்தியடைந்து வருகின்றது. இதனைக் கண்டு இன்று உலகமே பெருமிதம் கொள்கின்றது. எனவே இலங்கை தொடர்பில் பேசுகின்ற விமர்சிக்கின்ற இந்திய அரசியல் தலைவர்கள் இங்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாதத்தின் தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்ட வவுனியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் புஞ்சிஹேவா இன்று உயிருடன் இருந்திருந்தால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் வடக்கின் அபிவிருத்தியையும் கண்டு மகிழ்ச்சியடைந்திருப்பார்.

எதிர்கட்சித் தலைவராக இருந்த அப்பாத்துரை அமிர்தலிங்கம் பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது பாரியார் திருமதி அமிர்தலிங்கம் இலங்கை திரும்பிய சந்தர்ப்பத்தில் அவர் முதலில் சந்தித்தது அமிர்தலிங்கத்தின் சாரதியான சிங்களவரைத்தான் என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment