Thursday, July 14, 2011கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை வைத்துள்ள குழுக்களை கைதுசெய்ய இராணுவத்தினரும், காவற்துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில ஆயுதக்குழுக்கள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒவ்வொரு இடங்களில் கைவிட்டு செல்வதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 209 தோட்டக்களை தாம் கைப்பற்றியதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை கைவிட்டுச் சென்ற ஆயுதக்குழுவினர் குறித்து கண்டறிய விசேட இராணுவக் குழு ஒன்று கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இயங்கும் கட்சி ஒன்றை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் தொடர்புக்கொண்டு சட்டவிரோத ஆயுதங்களை எவ்வாறு ஒப்படைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை கையளிக்க தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை வைத்து கொண்டு நடமாடி திரிபவர்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து இராணுவத்திற்கு தகவல்கள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆயுதங்களை கையளிப்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என சில குழுக்கள் பிரசாரம் செய்து வருவதாகவும் எனினும் ஆயுதங்களை கையளிப்பவர்களை தாம் கைதுசெய்ய போவதில்லை எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment