Friday, July 22, 2011

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு: முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை தூதர் உறுதி!

Friday, July 22, 2011
சென்னை: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார். இதையடுத்து, டில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, துணை தூதரகத்தின் உயரதிகாரி அமீத் அஜ்வாத் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதாவது: பாக் ஜலசந்தியில், மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் அவ்வப்போது தாக்கப்படுவது, மிகவும் கவலை அளிக்கிறது. அதுபோன்ற சம்பவங்கள், இனி நடக்காமல் இருக்க வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில், மூன்று முறை தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறை பிடிக்கப்படுவது முற்றிலுமாக தடுத்தல், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவாக முழு மறுவாழ்வு பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இந்த சந்திப்பு குறித்து, இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழக மீனவர் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆகிய இந்த இரண்டு முக்கிய பிரச்னைகளை தீர்த்து, நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இதுவே நல்ல நேரம். இப்பிரச்னைகளை இலங்கை தீர்க்கும் என உறுதியளித்தோம்,'' என்றார்.

No comments:

Post a Comment