Wednesday, July 20, 2011லண்டன்: இங்கிலாந்தில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சிக்கிய 168 ஆண்டு கால பாரம்பரிய பத்திரிகை Ôநியூஸ் ஆஃப் த வேல்டுÕ சமீபத்தில் மூடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நாடாளுமன்ற குழு விசாரணையில் ஆஜராகும்படி பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக்குக்கு உத்தரவிடப்பட்டது. நியூஸ் ஆப் த வேல்டு பத்திரிகையில் மாஜி நிருபர் சியன் ஹோரே நேற்று முன்தினம் இறந்தார். இதனால் போன் ஒட்டு கேட்பு விவகாரம் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோ நேற்று ஆஜரானார். உடன் அவரது மனைவி வெண்டி டெங், மகன் ஜேம்ஸ் முர்டோக் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது விசாரணை நடக்கும் அறைக்குள் திடீரென ஒருவர் புகுந்தார். அவர் ஒரு தட்டில் கொண்டு வந்திருந்த ஷேவிங் நுரையை ரூபர்ட் முர்டோக் மீது வீச முயன்றார். அப்போது முர்டோக் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி வெண்டி டெங் எழுந்து அந்த நபரை தடுத்தார். இந்த தாக்குதலில் ரூபர்ட் முர்டோக்குக்கு காயம் ஏற்படவில்லை. விரைந்து வந்த காவலர்கள் தாக்குதல் நடத்திய நபரை பிடித்துச் சென்றனர். அவர் ஒரு கோமாளி என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் தடைபட்ட விசாரணை, மீண்டும் தொடங்கியது. அப்போது பதில் அளித்த முர்டோக் கூறியதாவது: இன்றைய தினம் எனது வாழ்வில் அவமதிப்பை ஏற்கும் நாள். போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி மில்லி டாலரின் போனிலிருந்து தகவல் சேகரித்த விஷயத்தை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
53 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் நடந்த ஊழலை கண்டுபிடிக்க தவறியதற்கு நான் முழு பொறுப்பேற்க முடியாது. நான் சிலரை நம்பி இந்த பத்திரிகை நிறுவனத்தை நடத்தினேன். அவர்கள்தான் இந்த குற்றத்துக்கு காரணம். செப்.11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வாய்ஸ் மெயிலில் இருந்து தகவல் பெற்றதற்கு எங்களிடமும், எப்.பி.ஐ.,யிடமும் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு முர்டோக் கூறினார். ரூபர்ட் முர்டோக்கின் மகன் ஜேம்ஸ் முர்டோக்கும், போன் ஒட்டு கேட்பு விஷயத்துக்காக மன்னிப்பு கோரினார்.
No comments:
Post a Comment