Wednesday, July 20, 2011உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பிரசார நடவடிக்கைகளையும் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வேட்பாளர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி நள்ளிரவு வரை தமது இல்லங்களில் தேர்தல் அலுவலகங்களை நடத்த முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஊடாக தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 25 இலட்சத்து, 67 ஆயிரத்து 539 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாயிரத்து 181 வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக, 60 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment