Friday, July 22, 2011

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உதவி இன்ஸ்பெக்டர் கைது!:-நகை கொள்ளையர்கள் கைது!

Friday, July 22, 2011
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டதாக வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜயந்த கமகே குறிப்பிட்டார்.

கைதான பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொச்சிக்கடை பகுதியில் நகை கொள்ளையர்கள் கைது!
மோட்டார் சைக்கிள் மூலம் பெண்களின் கைப்பை மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் செல்லும் கும்பல் ஒன்றின் இரண்டு சந்தேகநபர்களை நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இத்தகைய 31 சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றுள் ஒன்பது சம்பவங்கள் தொடர்பில் சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, தங்கொடுவ, மாரவில, கொஸ்வத்தை, வெண்ணப்புவ மற்றும் கொடதெனியாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தங்க நகைக்கொள்கை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைத் தேடி பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்தின் வடபகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணாயக்காரவின் பணிப்புரையின் பேரில் பேலியகொடை விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உபுல் சமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment