Friday, July 22, 2011

150 கி.மீ. சென்று தாக்கும் பிரகார் ஏவுகணை சோதனை வெற்றி!

Friday, July 22, 2011
சண்டிப்பூர் : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரகார் ஏவுகணை நேற்று ஒரிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பிரகார் ஏவுகணை முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை. இது 150 கி.மீ. சுற்றளவுக்கு சென்று எதிரிகளை தாக்கும் சக்தி படைத்தது. இந்த ஏவுகணை ஒரிசாவில் சண்டிப்பூர் கடற்கரையோரம் நேற்று காலை 8.20 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இது பற்றி, ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ரவி குப்தா கூறியதாவது: பிரகார் ஏவுகணை 7.3 மீட்டர் நீளம் கொண்டது. இது 200 கிலோ வெடிபொருளுடன் 35 கி.மீ. உயரத்திற்கு பறந்து, 150 கி.மீ. தூர இலக்கில் சென்று தாக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகளை வெவ்வேறு திசைகளில் ஏவலாம். 4 நிமிடம், 10 வினாடிகளில் இலக்கை தாக்கி விடும்.

ஏற்கனவே 40 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பினாகா, 250 முதல் 350 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் பிருத்வி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இவற்றுக்கு இடையே இந்த புதிய ஏவுகணை 150 கி.மீ. தூர இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, கடலில் கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு அதிலிருந்தும், ரேடார் மூலமாகவும் ஏவுகணை செயல்பாடு கண்காணிக்கப்பட்டது.

இவ்வாறு ரவி குப்தா தெரிவித்தார். ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி.கே.சரஸ்வத் உள்பட விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment