Tuesday, July 19, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா இன்னமும் கைவிடவில்லை என்பதனையே அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்தி யம்புகின்றன என்று குற்றம் சாட்டும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ் மக்களுக்கு சம உரிமை, மொழி உரிமை வழங்கப்பட வேண்டுமென்றே புலம்பெயர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் கூறினார்.
இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முதலாளித்துவ கொள்கையை கடைப்பிடிக்கவில்லை. இடதுசாரி கொள்கையில் மத்திய தர நாடுகளுடன் நட்புறவுகளை பேணி வருகிறது.
இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளுடன் நட்புறவுடன் இலங்கை செயற்படுவதை மேற்குலகம் விரும்பவில்லை. அவர்களுக்கு அடிமையாக இருப்பதனையே விரும்புகின்றது. ஆனால் எமது அரசாங்கம் கொள்கைகளை காற்றில் பறக்கவிடாது உறுதியாக செயற்படுகின்றது. எனவே எமது அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இவ் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு அமெரிக்காவிற்கு தலைவணங்கும் அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பாடுகளை அமெரிக்கா முன்னெடுக்கின்றது.
பிரான்ஸ் விஜயம்
அண்மையில் பிரான்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். இதன்போது அங்கு வாழும் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள மக்களை சந்தித்தேன்.
சுமார் 200 பேருடன் கூட்டமொன்றும் நடத்தப்பட்டது. இதன்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மொழி உரிமையை உறுதிப்படுத்தி அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்தோடு தமிழ், சிங்கள மக்களிடையே அந்நியோன்னியத்தை ஏற்படுத்தி இரு இனங்களுக்கு இடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இனங்களிடையே நம்பிக்கையை புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம் மக்களிடம் தெரிவித்தேன்.
அத்தோடு வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இலங்கையில் தமது சொந்தக் கிராமத்திற்கு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரியமை பிழையானது. தற்போது இது நீக்கப்பட்டுள்ளது. இதனை அம் மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
சனல் 4 மற்றும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். அதற்கமையவே இப்பிரச்சினைக்கு பதிலளிக்கப்பட வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை பேண வேண்டியது கட்டாயமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment