Tuesday, July 19, 2011

சென்னையில் நாளை ஹிலாரி கிளிண்டன் நிகழ்ச்சிகள் விவரம்!

Tuesday, July 19, 2011
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய டெல்லி வந்துள்ளார். அவரை வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் வரவேற்றார்.

ஹிலாரியுடன் அமெரிக்க தேசிய புலனாய்வு துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், அமெரிக்க ஜனாதிபதியின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் ஜான் ஹோல்ட்ரன் ஆகியோர் அடங்கிய உயர் மட்ட குழுவும் வந்துள்ளது.

இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஹிலாரிக்கு மதிய விருந்து அளித்தார். மாலையில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் இரவு தங்கும் ஹிலாரி கிளிண்டன் நாளை (புதன்கிழமை) காலை சென்னை புறப்பட்டு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நேராக கோட்டைக்கு வந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் செய்யப் போகும் முதலீடுகள் மற்றும் பரஸ்பர விஷயங்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். இதன் பிறகு திருவான்மியூர் கலாசேத்ராவுக்கு ஹிலாரி கிளிண்டன் செல்கிறார்.
உழைக்கும் மகளிர் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுடன் பேசுகிறார்.

பின்னர் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்திற்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசுகிறார். சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹிலாரி 21-ந் தேதி காலை இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார்.

No comments:

Post a Comment