Thursday, July 14, 2011

ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதல்; 5 பிரான்ஸ் வீரர்கள் பலி!

Thursday, July 14, 2011
ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு படைகள் அங்கு அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளன. படிப்படியாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

அமெரிக்க நேச நாட்டு படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று கபிசா மாகாணத்தில் தகப் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டு படை வீரர்கள் சாலைப்பணி மற்றும் பாலம், அணைகள் கட்டும் திட்டப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது மனித குண்டு தாக்குதல் நடந்தது. உடலில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு வந்த தீவிரவாதி திடீரென்று அதை வெடிக்கச் செய்தான். இதில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலியானார்கள்.

மனித வெடிகுண்டும் உடல் சிதறி பலியானான். பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சில நாட்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தான் சென்று திரும்பினார். அங்குள்ள 4000 பிரான்ஸ் படை வீரர் களில் 1000 பேர் நாடு திரும்புவார்கள் என்று அறிவித்தார். இந்த நிலையில் பிரான்ஸ் படை வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹர்சாய் தம்பி அகமத் வாலிகர்சாய் சில நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்குகளில் அதிபர் ஹர்சாய் கலந்து கொண்டு விட்டு காபூல் திரும்பிய நிலையில் மீண்டும் மனிதகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment