Sunday, January 25, 2015

சாய்ந்தமருதில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கூட்டத்தில் கைகலப்பு, இடைநடுவே நிறுத்தம்!

Sunday, January 25, 2015
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ”தற்போதைய அரசியல் நிலவரமும், நல்லாட்சிக்கான எமது பங்களிப்பும்” எனும் தலைப்பில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  (24) மாலை கூட்டம் இடம்பெற்றது.
 
எஸ்.முபாரக் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் இடைநடுவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார செயலாளர் சிராஜ் மஸ்ஹுர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது சபையில் இருந்தவா்களினால் கேள்விகள் கேட்கப்பட்டதால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. 
 
குறித்த அமைதியின்மையின் காரணமாக கூச்சல், குழப்பம், கைகலப்பு ஏற்பட்டதுடன் வரவேட்பு மண்டபத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதுடன் கதிரைகளும் உடைக்கப்பட்டன. 
 
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உரையாற்ற இருந்த வேளையில் தொடராக இடம்பெற்ற அமைதியின்மையின் காரணமாக கூட்டம் இடைநடுவே கைவிடப்பட்டது. 
சாய்ந்தமருது அரசியல்வாதியின் ஆதரவாளர்களே கூட்டத்தை தொடர அனுமதிக்காமல் இடையூறு விளைவித்ததாக சபையில் கூடியிருந்தவர்களால் பேசப்படுவதை அவதானிக்க முடிந்தது. பின்னர் கல்முனை பொலிசார் வரவழைக்கப்பட்டு நிகழ்வுக்கு வருகைதந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினரை பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால உத்தியோகபூர்வ விஜயம் – பெப்ரவரியில் இந்தியா, மார்ச்சில் சீனா!

Sunday, January 25, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரச பயணமாக இலங்கைக்கு வருகிறார். இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால உத்தியோகபூர்வ பயணமாக சீனா செல்கிறார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் முதலாவது பயணமாக ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார். அதன்படி அவர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு அரச பயணத்தை மேற்கொள்ள திகதிகளை வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
 
தற்போது இந்தத் திகதிகளில் இந்தியப் பிரதமரினால் சந்திப்பில் கலந்துகொள்ள முடியுமா என்பது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்படவுள்ளன. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அரசியல், பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த பயணத்தின்போது ஆராயப்படவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கான முதலாவது அரச பயணமாக வருகிறார். இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ பயணமாக சீனாவுக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்கு சீன அரசால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவித்தன. இந்தப் பயணத்தின்போது சீன ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

பாலிவுட் ‘கான்’கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும்: நடிகர்களுக்கு இந்து மகாசபா வலியுறுத்தல்!

Sunday, January 25, 2015
இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர்களான  ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோரை இந்து மகாசபா வலியுறுத்தியுள்ளது.
 
இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பத்திரிகையான 'இந்து சபா வார்த்தா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் "ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களாக இருந்தால் இந்து மதத்தைத் தழுவ வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர். இவர்கள் தவிர ஃபர்தீன் கான், இம்ரன் ஹஷ்மி ஆகியோரும் இந்து மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களையும் தனது  பட்டியலில் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் முன்னா குமார் சிங் கூறுகையில், "இது பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு எங்களது சவால் ஆகும். இவர்கள் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களானால் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “இந்துக்களுக்கும் இந்து நாட்டுக்கும் எதிராக சதி நடந்து வருகிறது. நடிகைகள் ஷர்மிளா தாகூர், கரீனா கபூர், கௌரி, கிரண் ராவ், ரீனா தத், கவுரி சிப்பர் ஆகியோரை முன்னா குமார் சிங், ‘லவ் ஜிஹாதியால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தார்.

(புலிகளின்) புலி கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை!

Sunday, January 25, 2015
புலி கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கு கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆயிரக் கணக்கான  அரசியல் புலி கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள், கைது செய்பய்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய எழுத்து மூல ஆவணமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறுபான்மை சமூகமான தமிழருக்கு தீர்வொன்றை காணும் நிலைப்பாட்டில் புதிய அரசு:ரணில் விக்ரமசிங்க !

Sunday, January 25, 2015
இலங்கையின் சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருக்கின்றது. வடக்குக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்தும் தமது புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி மாதம் நடந்த தேர்தலானது மாற்றத்திற்காக இடம்பெற்ற தேர்தல் எனவும் இந்த மாற்றத்தின் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்த பிரதமர் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதில் செய்யப்பட வேண்டிய பணிகளில் மிக முக்கியமான பணி ராஜபக்ஷ அரசாங்கம், அரசியல்மயப்படுத்திய பொலிஸ் திணைக்களத்தை அதில் இருந்து விடுவிப்பது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
ராஜபக்ஷ அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக மேற்கொண்ட சில திட்டங்கள் விலை மனுகோரப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை கடந்த அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு முன்வைக்கவில்லை.
கொழும்பு காலி முகத்திடலுக்கு எதிரில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் சுற்றுச் சூழல் ஆய்வின் பின் ஆரம்பிக்கப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும்  ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Saturday, January 24, 2015

உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது : பிரிவினைவாதிகள் எச்சரிக்கை!

Saturday, January 24, 2015
உக்ரைனின் கிழக்கு பகுதியில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானநிலையத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் உக்ரைன் அரசுகும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்ற துவங்கியுள்ளனர். இதனால் இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தை புறக்கணித்து வருகின்றனர்.
 
உக்ரைனின் கிழக்கே உள்ள கிரிமீயாவை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சமீபத்தில் வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டனர். அத்துடன் டோனட்ஸ்க் உட்பட பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.உக்ரைன் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் யூனியன் தலைவர்கள் இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் ராணுவம் டோனட்ஸ்க் உள்ளிட்ட பல்வேறு கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது.
 
அத்துடன் டோனட்ஸ்க் நகர விமானநிலையத்திலும் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் பல்வேறு பகுதிகளில் தீவிர தாக்குதல் நடைபெற்று வருகிறது.இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சமாதான பேச்சுவார்த்தை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் அரசு மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்றிரவு மாஸ்கோவில் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, டோனட்ஸ்க் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுக்கள் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
 
உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை சமாளிக்க நாங்கள் தயாராகிவிட்டோம். நாங்கள் சமாதானத்துக்குத் தயாராக இருந்தாலும், உக்ரைன் அரசு வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைக்கிறது என்று ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத தலைவர் அலெக்சாண்டர் ஜக்கார்சென்கோ கூறினார்.கிழக்கு உக்ரைனில் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 262 பேர் பலியாகி உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 5,086 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.