Tuesday, May 1, 2012

புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் அமெரிக்க வழக்குரைஞர்!

Tuesday, May, 01, 2012
இலங்கையில் பயங்கரவாத இயக்கத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது.

புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணிசமான, நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படாவிடின் சட்டத்துக்கான மதிப்பை கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாமெனத் தெரிவிப்பது போல் இது விளங்கிக் கொள்ளப்படுமென வழங்குரைஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் அச்சாணியான இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டது. மேலும் சந்தேக நபர், தீவிர அரசியல் நோக்கம் கொண்டவர் அல்ல. இவற்றைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே இவர் சிறையில் இருந்ததை தண்டனையாகக் கருதி அவரை விடுவிக்க வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிபதியிடம் வேண்டிக்கொண்டுள்ளார்.

இவரது செயல் தனியொரு நிகழ்வு மட்டுமே. இவர் நிலைமை சரியாகப் புரியாமல் தவறுதலாக நடந்துள்ளார். இவர் ஒரு பாடத்தைப் படித்துவிட்டார். இவர் தனது செயலுக்காக உண்மையில் மனம் வருந்துகின்றார். என இவரது வழக்குரைஞரான ஜெரிபொவ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தினருக்கு இரவுப் பார்வைக் கண்ணாடி வாங்க முற்பட்டதாக 35 வயதான மயில்வாகனம் ரமணன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

பெங்கோக்கில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் குடிபோதையில் கலகம் ஏற்படுத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Tuesday, May, 01, 2012
இலங்கை::பெங்கோக்கில் இருந்து இலங்கை நோக்கி வந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் குடிபோதையில் கலகம் ஏற்படுத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் மாலைத்தீவு பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

பெங்கோக்கில் இருந்து நேற்று 30ம் திகதி காலை 9 மணிக்கு இலங்கை நோக்கி வந்த விமானத்தில் இவர்கள் இவ்வாறு கலகம் ஏற்படுத்தியுள்ளதோடு நேற்று இரவு 11 மணிக்கு விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்த பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, துபாயில் இருந்து வந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் மது போதையில் கலகம் ஏற்படுத்திய இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பில் சுவரொட்டிகள்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி சென்னையில் முஸ்லிம்கள் 500 பேர் கைது: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு!

Tuesday, May, 01, 2012
சென்னை::சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ.ஹைதர்அலி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி உள்பட 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம்களை அழிக்க திட்டம்

மேலும், இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ம.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறும்போது, ``இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு, தற்போது அங்கு வாழும் முஸ்லிம்களை அழிக்க திட்டம் தீட்டி வருகிறது. அங்குள்ள தம்புலா என்ற ஊரில் 50 ஆண்டு பழமையான பள்ளிவாசலை இடிக்க துணிந்துள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க ராஜபக்சே அரசுதான் காரணம். எனவே, இதை ஓரணியில் நின்று எச்சரிக்கிறோம்'' என்றார்.

கைது

அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். பின்னர், அங்கிருந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை போலீசார் மறைத்து கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போலீஸ் பஸ்களில் ஏற்றப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி!

Tuesday, May, 01, 2012
கவுகாத்தி::அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலி ஆனார்கள்.

இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-ஆற்றில் படகு கவிழ்ந்தது

அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தது. நடு ஆற்றில் சென்று கொண்டிருந்து போது பலத்த காற்று வீசியதால் திடீரென்று அந்த படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.

200 பேர் பலி

தண்ணீருக்குள் விழுந்தவர்களில் 50 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. மற்ற 200 பேரும் தண்ணீரில் மூழ்கியும், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டன.

மன்மோகன்சிங் உறுதி

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் பிரதமர் மன்மோகன்சிங், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அறிந்ததாகவும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்புக்குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததாகவும் அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் கூறினார்.

விபத்து நடந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உதவித்தொகை

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்து உள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப்பணிகளில் அசாம் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மே தின செய்தியில்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் உழைக்கும் மக்களை அதளபாதளத்திற்குள் தள்ளவும் பல தோற்றங்களில் வந்து, சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள மே தின செய்தியில் இதனை அவர் கூறியுள்ளார்.

மிகவும் கௌரவமான முறையில் இம்முறை மே தினத்தை நாம் கொண்டாடுகிறோம். நாட்டின் பொருளாதாரத்தை 8.3 வீதமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளது. இதற்கான மரியாதையும் மதிப்பும் இலங்கையின் உழைக்கும் மக்களுக்கே கிடைக்க வேண்டும். தற்போது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கி பயணித்து வருகிறது.

30 வருடங்களாக உரிமைகளை இழந்திருந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு சுதந்திரமான தமது மே தினத்தை கொண்டாடும் உரிமை தற்போது கிடைத்துள்ளது. வடக்கு- தெற்கு என்றில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒரே தேசியக் கொடியின் கீழ் கொண்டுவது காலத்தின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்...

தேசிய ஐக்கியத்தை பாதுகாப்பதிலும் அபிவிருத்தியை அடைவதிலும் உள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கான அனைத்துப் பெருமைகளும் அதற்கு உந்து சக்தியாக செயற்படும் தொழிலாளர்களையே சாரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு நிலையான அபிவிருத்தி பாதையில் பயணிப்பதாகவும், கிராமங்களும் நகரங்களும் வேறுபாடின்றி முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் தொழில், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாட்டின் இறைமையை பாதுகாப்பதுடன் பொருளாதார வெற்றியை உறுதி செய்யும் என்பதை, உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உழைக்கும் மக்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பிரிந்திருக்காது அனைவரும் ஒரே தேசிய கொடியின் கீழ் நாட்டிற்காக ஒன்றிணைந்து இருப்பதை உறுதி செய்வது காலத்தின் பொறுப்பு என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.