Thursday, September 1, 2011

வெலிகடை சிறைச்சாலையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத பேராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

Thursday,September,01,2011
வெலிகடை சிறைச்சாலையின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத பேராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கு உரிய விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தாமாகவே முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கை விட்டதாக சிறைசாலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நீதவான் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீதேறி இந்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு இன்று!

Thursday,September,01,2011
இடம்பெறவுள்ள எஞ்சிய 23 உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல், தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சியின் பொது செயலாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த தகவலை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ. சுமணசிரி எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான முதலாவது சந்திப்பு இதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தேர்தல்கள் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தேர்தல்களில் போது அரச வளங்கள் பாவிப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, இன்றைய சந்;திப்பின் போது தேர்தல்கள் ஆணையாளரை கோரவுள்ளதாக ஐக்கிய தேசிய பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக குறிப்பிட்டார்.

இதனிடையே, நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்றைய சந்திப்பில் போது கலந்துரையாட எதிர்பார்ப்பதாக ஜே வி பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது!

Thursday,September,01,2011
யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் குறித்த நபர்கள் கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இனுவில் கந்தசுவாமி கோயிலில் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் உள்ளிட்ட பல்வேறு பெறுமதி வாய்ந்த பொருட்களை குறித்த நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சில பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் ஏற்கனவே உருக்கப்பட்டு வேறும் ஆபரணங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கிறீஸ் மனிதர்கள் TNA நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பு என்கிறார் கருணா!

Thursday,September,01,2011
கிறீஸ் மர்ம மனிதர்கள் என்ற மர்ம செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பொய் பிரசாரம் காரணமாக மக்கள் தமது கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக முரளிதரன் கூறியுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர், கைதுசெய்யப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் விடுவிக்க முடியாது எனவும் கிறீஸ் மர்ம மனிதர்கள் இருப்பதாக கூறினாலும் மக்கள் இந்த பொய் பிரசாரத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என தேடிபார்க்கவில்லை எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் மர்ம மனிதர்கள் பற்றிய சம்பவங்களினால் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் இப்போது இழந்துபோய் உள்ளனர்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்!

Thursday,September,01,2011
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர், பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர்.

குழந்தைகள், சிறுவர்கள் இரவு முழுவதும் தமது பெற்றோர்களைக் கட்டிப்பிடித்தபடி பயத்தில் உறைந்தபடி உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தமது படிப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.

இந்த நிலைமையானது வடக்கு கிழக்கின் மக்கள் சமூகம் முழுவதையும் உளவியல் ரீதியாக வாட்டி வதைக்கும் ஒரு கொடூரமாக இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது

இதனை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் வதந்தி என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மர்மமாக நடமாடிய மனிதர்களை மக்கள் துரத்திய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அவர்களில் சிலர் அரச படைகளின் முகாம்களுக்குள்ளேயே ஓடி மறைந்திருக்கிறார்கள். அத்துடன் இவை தொடர்பாக இந்த அரச அதிகாரிகள் விடுக்கும் அறிக்கைகளும் சேர்ந்து இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்துக்கும் அரச படைகளின் அதிகாரத்துக்கும் இடையே திட்டமிட்ட தொடர்பு இருப்பதாக மக்கள் உறுதியாக நம்புவதற்கே வழிவகுத்திருக்கிறது.

இந்த மர்ம மனிதன் விவகாரம் மேலும் தொடருமாக இருந்தால் பலர் இதனால் மிகவும் ஆபத்தான உளவியல் நோய்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையே ஏற்படும். இரவு நேரங்களில் ஆண்கள் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல முடியாது உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து .இரவுகள் தோறும் நித்திரை முழிப்பதினால் ஏற்படும் பலயீனங்களுக்கும் நோய்களுக்கும் பலர் உள்ளாக நேரிடும்.


இந்த மர்ம மனிதர்கள் பற்றிய சம்பவங்களினால் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் இப்போது இழந்துபோய் உள்ளனர். அரசாங்கம் இந்த சம்பவங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதோ ஒரு குறுகிய அரசியல் நோக்கத்துக்காகச் செய்கிறது என்றே பரவலாக மக்கள் நம்புகிறார்கள். எனவே ஜனாதிபதியும் மற்றும் அமைச்சர்களும் இந்த விடயத்தில் உடனடியாக அக்கறை எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்புப் படைகள் மீதும் பொலிசார் மீதும் நம்பிக்கைகள் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.

பாதுகாப்புப் படைகளின் தளபதிகளும், பொலிஸ் அதிகாரிகளும் மக்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு மர்ம மனிதர்கள் விவகாரத்தை மூடிமறைக்கும் போக்கைக் கைவிட்டு விட்டு மிகவும் காத்திரமான முறையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மர்மமான மனிதர்களின் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று அறிவித்து சமூகவிரோதிகளுக்கு எதிராகச் செயற்படும் மக்களை அதிகாரத்தால் கட்டிப்போடுவது மர்ம மனிதர்களின் செயல்களுக்கும் அதைப் பயன்படுத்த முயலும் திருடர்களுக்குமே உதவியாக அமையும். எனவே பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மக்கள் அமைப்புக்களை அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்தி அவை மர்ம மனிதர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக காத்திரமான முறையில் செயற்பட அரச படைகளும் பொலிஸாரும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், வடக்கு கிழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும், சமயத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும் ஒன்றிணைந்து இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்துக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அ.வரதராஜப்பெருமாள்
முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.
31-08-2011

பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறை!

Thursday,September,01,2011
பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 அவது பிரிவின் கீழ் புதிய விதிமுறைகள் சிலவற்றை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் நியூஸ் பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

நான்கு பிரதான விடயங்கள் தொடர்பில் இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த விதிமுறைகளின் ஊடாக சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இதனைத்தவிர தமிழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனம் செயய்ப்பட்டமை மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடைசெய்வதற்கான தீர்மானம் என்பன தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களை இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் மூலம் எவ்வித பாதிப்புக்களும் இன்றி முன்னெடுக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும் சட்டமா அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.