Saturday, June 29, 2019

தமிழக தலைமை செயலர், டிஜிபி நியமனம்!

தமிழக தலைமை செயலாளராக சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ,தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் 2016 டிசம்பரில் பொறுப்பேற்றார்; நாளை (ஜூன்30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இதனை தொடர்ந்து, புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் பதவி காலம் 2017ல் முடிவடைந்தது. அவருக்கு தமிழக அரசு இரண்டாண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இம்மாதம் 30ம் தேதியுடன் அவரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் புதிய டி.ஜி.பி. நியமன பணிகள் துவங்கியுள்ளன. பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட் திரிபாதி காந்திராஜன் ஜாபர்சேட் ஸ்ரீலட்சுமி பிரசாத் அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட 14 பேர் பெயர் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பியது. இதில் சிறப்பாக செயல்பட்ட மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை இறுதி செய்து தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment