Friday, May 31, 2019

ஆளுநர் ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறதென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறது. அவர் அங்கு கடுமையான இனவாதத்துடன் செயற்படுகிறார் என்று தமிழ்- சிங்கள மக்களிடையே குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகிறது.
 
இலங்கையில், ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது கிழக்கின் ஆளுநராக ஹிஸ்புல்லாவே இருந்தார்.இதற்குப் பின்னரும், அவர் இனவாதமாக செயற்பட்டுள்ளார். தமது சமூகத்தினருக்காக மட்டும்தான் அவர் செயற்பட்டுள்ளார். இது ஆளுநர் ஒருவருக்கான தகுதியல்ல. அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
அதேபோல், மேல்மாகாணத்தின் ஆளுநர் அஸாத் சாலியும் கடுமையான போக்குடன் நடந்துகொள்கிறார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு குற்றங்களில் நாட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவை பாரதூரமான விடயங்களாகும். இதனால், இவர்கள் மூவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கையை ஜனாதிபதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 
அத்தோடு, குருணாகல்- தம்புள்ளை வைத்தியசாலைகளில் சிங்களப் பெண்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாத வைத்தியர்களால் கருத்தடை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, தற்போது 300 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பிலும், உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.
 
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈட்டினையும் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று எமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.எனது உயிர் போனாலும், இந்த விடயங்களில் இருந்து நான் என்றும் பின்வாங்கப்போவதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment