Sunday, April 21, 2019

இலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் துயரம்; பலி 186 ஆக உயர்வு?

ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் 3 தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 450 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 186 க்கும் மேற்பட்டோர் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 156 பேர் பலியானதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு கத்துவாபட்டியா செபஸ்டியான் ஆலயம் , பட்டிகோலாவில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் எந்த பயங்கரவாத அமைப்பினர் என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. மேலும் பிரபல நட்சத்திர ஓட்டல்களான சங்ரிலா, சின்னமோன்கிராண்ட், கிங்ஸ்புரி போன்ற ஓட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது. இந்த ஓட்டல்கள் இந்தியர்கள் அதிகம் தங்கும் நட்சத்திர ஒட்டல் ஆகும்.

இதற்கிடையில் மதியம் 2 மணியளவில் தெகிவாலா பகுதியில் (7 வது குண்டுவெடிப்பு) உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8 வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. இதில் பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை.சிறிது காலம் மைதியாக இருந்த இலங்கையில் தற்போது வன்முறை தலைதூக்கியுள்ளது கவலை அளிப்பதாகும். 10 ஆண்டுகளுக்கு பின் குண்டு சப்தம் கேட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்பொழுது அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment