Thursday, January 26, 2017

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வீதியால் நடந்து செல்ல முடியவில்லை: ஹிருணிகா!

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும்,இதனால் வீதியில் நடந்து செல்ல முடியவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய ஹிருணிகா சமகால அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விமர்சித்தார்.
 
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற வகையில் எம்மால் பதிலளிக்க முடியவில்லை. முன்னைய ஆட்சியை ஒழிக்கவும் புதிய ஆட்சியை ஏற்படுத்த முயற்சி எடுத்த பலர் இங்கிருக்கின்றார்கள். ஒருவேளை முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்களுக்கு என்ன நடக்குமென எம்மால் கூற முடியாது. அந்தளவிற்கு நாம் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக போராடினோம்
.
லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்நெலிகொட ஆகியோரை முன்னிறுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நான் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவள் அல்ல ஆகவே தைரியமாக எதனையும் கூற முடியும். எங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கததிற்கு காணப்படுகின்றது. நாம் இல்லையென்றால் இந்த அரசாங்கம் இல்லை. சிவில் சமூகத்தினர் இல்லாவிடின் பிரதமர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ அல்லது அமைச்சரவையோ இன்று இல்லை. 10 வருட ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் நாம் ஏற்படுத்திய ஆட்சியில் எக்நெலி கொடவின் மனைவி போன்றவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் எங்களாலேயே முடியும் என்றார்.

No comments:

Post a Comment