Friday, January 20, 2017

புலிகளின் முன்னாள் உறுப்பினரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது!

புலிகள் அமைப்பின் வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த எமில்காந்தனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.
 
சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திறைசேரியால் ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவினை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் 2ஆம் பிரதிவாதியான எமில்காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, 2006 ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி வரையான காலத்தில் கிளிநொச்சி அரசுக்கு சொந்தமான 200 மில்லியன் ரூபாவினை கொழும்பில் மோசடி செய்தமை, அதற்காக உதவி செய்தல், உள்ளிட்ட 7 குற்றங்களுக்காக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்கு தொடரப்பட்டது.
 
மேலும் கடந்த வழக்கின் போது ஆஜராகாத எமில்காந்தனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதாக நேற்று மன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் களு ஆராச்சி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறவுள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசன்த தெரிவித்தார்.
 
மேலும் 1 தொடக்கம் 6 வரையான சாட்சிகளை ஏதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளான டிரான் அலஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தனர்.
 
ஜெயலங்க வீடமைப்பு திட்டத்தால் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் 800 வீடுகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment