Wednesday, October 21, 2015

பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் வந்தால் சட்ட நடவடிக்கை : தினேஸ் குணவர்த்தன!

Wednesday, October 21, 2015
பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் உள்ளக விசாரணை நடைபெறுமாயின் அது அரசியலமைப்பை மீறு வதாகவே அமையும். அவ்வாறு அரசிய லமைப்பை மீறும் செயற்பாடுகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம் என மஹிந்த அணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
'ஐக்கிய நாடுகள் உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணையே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை உள்ளக விசாரணை பொறிமுறை என்று கூற முடியாது. வெளிநாடுகளின் தலையீடுகள், பங்கேற்புகள், நிபந்தனைகள் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்ற உள்ளக விசாரணையையே உள்ளகப் பொறிமுறை என்று நாம் கூற முடியும்.
 
அதனை விடுத்து வெளிநாட்டு, பொதுநலவாய நீதிபதிகளுடனும் வெளிநாட்டுப் பங்களிப்புடனும் உள்ளக விசாரணை இடம் பெறுமாயின் அதனை ஒருபோதும் உள்ளக விசாரணை என்று கூற முடியாது. அவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கவும் முடியாது. மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் கலப்பு விசாரணையே இடம் பெற உள்ளதாக கூறி வருகிறார். அப்படியாயின் அது சர்வதேச விசாரணை என்றே பொருள்படும். அதனை எவ்வாறு உள்ளக விசாரணை என்று கூறுவது?
 
இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிநாட்டுத் தலையீடுகளுடனும் பொதுநலவாய பங்களிப்புடனும் விசாரணை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. இதற்கு அனுமதிக்கவும் முடியாது. அதுமட்டுமன்றி இந்த உள்ளக விசாரணை எனக் கூறப்படும் பொறிமுறையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்களும் இலங்கையின் பல பாகங்களில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகங்கள் அமைக்கப்படுவதானது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும். அதற்கும் ஒருபோதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.
 
எனவே அரசாங்கம் உள்ளக விசாரணை என்ற போர்வையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் ஒரு விசாரணை செயற்பாட்டை இலங்கையில் முன்னெடுக்குமாயின் அதனை எதிர்த்து நிற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படுமானால் அது எமது நாட்டின் அசியலமைப்பை முற்று முழுவதுமாக மீறுவதாக அமையும். அதனை மேற்கொள்வதற்கு நாம் விடமாட்டோம். அவ்வாறு அரசியலமைப்பை மீறும் வகையில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படுமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தயங்காது என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
 
அரசியலமைப்பை மீறுவதற்கு இடமளிக்க முடியாது. எமது இறைமை உள்ள நாட்டின் அபிமானத்தை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய ஆட்சிக்காலத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசனை வழங்க நியமித்தமையை தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுத் தலையீடு எனக் கூறுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை. அதனை வெளிநாட்டு தலையீடு என்று கூற முடியாது. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவே டெஸ்மன் டி சில்வா தலைமையில் சர்வதேச குழுவினர் நியமிக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கம் கூறுகின்ற உள்ளகப் பொறிமுறை கட்டமைப்பில் வெளிநாட்டுப் பங்கேற்பு நேரடியாகவே இடம் பெறுகின்றது.
 
வெளிநாடுகளிலிருந்து வருகின்ற நீதிபதிகள், மற்றும் வழக்கறிஞர்கள் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப செயற்படமாட்டார்கள். அப்படியாயின் அது எமது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமையும். எனவே இவை தொடர்பில் நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும். எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது நாடு முழுவதும் இந்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் மக்களை தெளிவூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளது.
 
அதன் ஒரு கட்டமாகவே கொழும்பில் இன்று பாரிய கூட்டமொன்றை நடத்த இருக்கின்றோம். அதுமட்டுமன்றி நாங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எதிர்கட்சியில் செயற்பாடுகளை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

1 comment:

  1. The hayagrivas silk house is the largest textile mall in chennai that has proven to be a shopper's delight in wedding sarees, kanchipuram silk sarees and latest chudidhar collections for all generations of families.

    ReplyDelete